Posts tagged ‘Old poems’

ஜனவரி 10, 2011

பறந்ததோ பழந்தான் – vivaegachinthaamaNi

தேனுகர் வண்டு மதுதனை உண்டு தியங்கியே கிடந்ததைக் கண்டு
தானதன் சம்புவின் கனியென் றதனை தடங்கையில் எடுத்துமுன் பார்த்தாள்
வானுறு மதியம் வந்ததென் றெண்ணி மலர்க்கரம் குவியுமென் றஞ்சிப்
போனது வண்டோ பறந்ததோ பழந்தான் புதுமையோ இதுவெனப் புகன்றாள்
                                                                                -விவேகசிந்தாமணி 19
 
சுவை சேர்ந்த விளக்கம்
தேனை விரும்பி உண்ணும் வண்டோ தேனை வயிறார உண்டுவிட்டு மயங்கிக்கிடந்ததை கண்ட எழில் மிகுந்தப் பெண் அதை நன்றாய் கனிந்த கருநிற நாவற்பழமென தன் காந்தள் மலர் கரங்களின் விரல்களினால் பற்றிஎடுத்து தன்னுளங்கையில் வைத்து உற்றுப்பார்க்கையில் தண்ணொளி கண்ணிடை தானுழைய கண்திறக்க அவள் முகம் கண்ட வண்டு அந்திப்போழுதாகி வானத்தில் நிலவு வந்துவிட்டது இதழ்கதவிதோ மூடி நாமிருக்கும் காந்தள் குவிந்து நமக்கது சிறையாகும் குன்றா முயற்சியுடனே நித்தம் நில்லாதியங்கும் நற்கோ பொற்கோ காலம்தனயே மதியது கணப் பொழுதிருப்பினும் கொளக்கொள கொண்டுண்ணும் காலனார் தானும் நீயும் வந்திடுவாய் தனை தந்திடுவாய் என்று சிறையுள்ளே நமை பெற்றிடுவார் என்றஞ்சியே இல்லம்நோக்கி அவ்வண்டு விரைய புதுமையாய் இந்நாவர்பழம் தானும் பறந்திடுதே என்று மலைய்த்துக் கூறினாள்//
 
விளக்கம் தினமணி இணையதளத்திலிருந்து
தமிழ் இலக்கிய வானில் பிற்காலத்தில் தோன்றிய நூல் விவேகசிந்தாமணி. நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களைக் கொண்ட அந்நூலின் ஆசிரியர் பெயர் காணப்படவில்லை.
 
பல பாடல்கள் நமது நீதி நூல்களில் காணும் வாழ்வியல் உண்மைகளை எளிய நடையில் தெளிவாக விளக்குகின்றன. இயற்கை நிகழ்ச்சிகளைக் கற்பனை நயத்துடன் படம்பிடித்துக் காட்டும் அற்புதமான பல பாடல்களும் இடம் பெறுகின்றன.

 

“குயில் கூவிக் கொண்டிருக்கும்; கோலம்மிக்க மயில் ஆடிக்கொண்டிருக்கும்; காற்றுக் குளிர்ந்தடிக்கும்; கண்ணாடிபோல் நீரூற்றுகள் மிக்கவுண்டு; பூக்கள் மலர்ந்து நிற்கும்; பூக்கள் தோறும் சென்று தேனீக்கள் இன்னிசை பாடிக் களிக்கும்’ என்று சஞ்சீவி பருவதத்தின் சாரலில் பாரதிதாசன் பாடியதுபோன்ற எழில்மிகு சோலை.

 

இக்காட்சிகளைக் கண்டு துய்க்கும் பேறுபெற்றாள் ஒரு நங்கை. பஞ்சினும் மெல்லிய தன் செஞ்சீறடி நோக இயற்கை அழகில் மயங்கி நின்றாள்.

 

அவளோ செந்தாமரை போன்ற செந்நிற மேனியாள்; மீனைப் பழித்த விழியாள்; அமுதம் பழித்த மொழியாள்; அன்னம் பழித்த நடையாள்; கன்னங்கருத்த குழலாள்; சின்னஞ் சிறுத்த இடையாள்; கள்ளங் கபடமற்ற உள்ளத்தாள்; கண்டோரைக் கொள்ளை கொள்ளும் எழிலரசி.

 

தன் கண்ணின் கருவிழியைப் பழிக்கும் இனிய கரிய நாவல் கனியொன்றைக் கண்டு நாவில் நீரூறச் சென்றாள். கொடியிடை துவளக் குனிந்து மலர்க்கையால் கனியை எடுத்தாள். அதுவோ கனியன்று; கருவண்டு. செந்தாமரை மலரில் அமர்ந்திருப்பது போன்ற உணர்வு மேலிட மேல் நோக்கிக் கண்டது. “அந்தோ! கண்முன் காணப்படுவது கவின் நிலவன்றோ? கணப்பொழுது கழிந்தாலும் நாம் சிறைப்படுவது உறுதி. மதியின் வரவு கண்டால் குவியுமன்றோ?’ என எண்ணிப் பறந்தது அந்த வண்டு.

 

தலைவி விழித்த கண் இமைக்காது வியப்பும், திகைப்பும் மேலிட, “போனது வண்டோ? பழந்தான் பறந்ததோ?’ என ஐயுற்றாள். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என ஏங்கினாள்.
நன்றி தினமணிAdvertisements
ஜனவரி 8, 2011

கூடாதார்க்குச் சொல்ல ஒண்ணாத அறிவுரைகள் – vivekachinthaamaNi

வானரம் மழைதனில் நனையத் தூக்கணம்
தானொரு நெறிசொலத் தாண்டிப் பிய்த்திடும்
ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும்
ஈனர்க்கு உரைத்திடில் இடர்அது ஆகுமே
-விவேகசிந்தாமணி 9

கற்பனை பூண்ட விளக்கம்:
(சற்றே சோமசுந்தரப் புலவரின் வழியை கடை பிடித்தலை பொறுத்துக்கொள்ளவும்)

காட்டிலே மழையைப் பார்த்து உளம் பூரித்துக் கொண்டிருந்த ஒரு தூக்கணம் குருவியானது அதிலே நனையும் குரங்கினைக்கண்டு பரிவு கொண்டது கூடு கட்டி அதிலே நனையாதிருந்த அத்தாய்க் குருவி குரங்கினை மழை பெருமானிடமிருந்து தப்புவித்துவிடும் நோக்கிலும் அதற்கு செய்யவேண்டியது என்னவென்பதை உணர்த்தும் ஆர்வத்திலும் நன்றாய் சிந்தித்து உன்னெதிர்காலம் எண்ணாது கொம்பில் தாவி மகிழ்ந்திருந்த பொழுது  பின்னாபத்துக்கருதி என்போல் ஒரு வீடுகட்டியிருப்பீரானால் உலகுய்ய வளம்கொடுக்கும் இம்மழை மணவாளன் நிலப்பெண்ணை மணக்கும் இம்மகிழ்வான விழாவினை உள்ளிருந்தே கண்டு சுற்றத்துடன் உவந்திருக்கலாமே ஆனதானதேயாயினும் இனியாவது பின்னழிவு நேராது முன்காப்பீர் இப்பொழுதோ அன்னெடும் பனைமரத்து பழுத்துதிர்ந்த ஓலைதனை தலைமேலுயர்த்திப் பிடித்து அதன்கீழ் மழைக்கு ஓரம்போவீர் என்று ஓரறிவுரை தாயுள்ளத்துடன் சொல்லிடவே மழைக்கு மறைந்திடவே ஓரிடமில்லா என்னிலைகண்டு மனமிரங்காது நகைப்புற்று தன்னறிவுக்காட்டிட அறிவுரை சொல்லிடுதே செருக்குடை இச்சிறுக்குருவிதானுமெனத் தவறாயெண்ணிய குரங்கோ அக்குருவியின் உள்ளுணர்வுணராது பேரறிவாளன் எனக்கிவ் வைந்தறிவுள்ளக் குருவி தானும் என்னைவிட மிகுந்த அறிவு கொண்டான் போல் செருக்கு உளம் நிறைய என்னிலைக்கு நகைத்து அறிவுரைப்பதேன் தான் மழை நனையாது நான் மழை நனைந்திடதானன்றோ என்று வெகுண்டுரைத்து தான் நனைந்திடில் இங்ஙனம் தான் எண்ணுமோ என்று கடிந்து சொல்லி தன்செயல் விளைவு எண்ணாது தூங்கும் கூட்டில் தூங்கும் குஞ்சுகளின் பாடுபாராது கண்ணிமைப்பொழுதில் தாவிப்பிய்த்தது பாடம் புகட்டிட இன்றே பிறந்த என்னருமைக் குஞ்சுகள்போலுன் பிள்ளைகள் தான் தன்னை பார்த்ததாலன்றோ உன்னின்னா நீக்க நான் சொன்னேன் என்று குருவிதன் வாயாற்சொல்லுமுன் வீழ்ந்தனக் குஞ்சுகள் வீடுடைந்ததால் தரையிலேயே

மழைக் கோமகன் நிலக்கொமகள் தன்னை கொள்ளும் பொழுது மேகக்கோன் செய்த தோரணமாய் வந்த மின்னல் தொடங்கி முடிந்திடுமுன்னே தன்னிலை தலைகீழாய் போனதுணர்ந்த அச்சிறுப்புள் தன்னுணர்வு குரங்கறியச்சொல்லிவிட்டு ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும் தகுதியற்றோர் தனக்குரைக்கின் தான் கெட்டு தன்குலமுமன்றோ கெட்டிடுமென்று வருந்தி கீழ்வீழ்ந்து காயம்கொண்ட தன் குழந்தைகளை தன் இணையுடன் சேர்ந்து தன்சிறகால் தழுவி கண்கலங்க மிகுந்தவன்புடன் தலையால் அணைத்துக்கொண்டது.