Posts tagged ‘Azhappapuram school’

ஜூலை 31, 2010

எனது ஆரம்ப பள்ளிப்பருவம்:

அழகப்பபுரம் என்பது பெயருக்கு ஏற்றார் போல் அழகாக இருந்தது. அங்கே பழமையின் நினைவுச்சின்னமாக இருந்தது புனித அந்தோனியார் ஆரம்பப்பள்ளி. இன்றும் பசுமை மாறா நினைவுகளை தரும் அந்தப்பள்ளி ஒட்டுக்கூரையை கொண்ட ஒரு ‘ப’ வடிவக் கட்டிடத்தையும், ஒரு தலைகீழ் ‘பு’ வடிவக்கத்டிடத்தையும்கொண்டிருந்தது . ‘ப’ வடிவக் கட்டியாத்ம சற்று பெரியது. அதன் இருபக்கங்களும் நெடியது. அதன் நடுவில் பள்ளிவளாகம். ‘பு’ வடிவக் கட்டிடம் சற்று சிறியது. அதன் மூன்று கரங்களாய் அமைந்த பக்கங்களும் குறுகியது. அதன் வாய்ப்பகுதியில் அரங்கம் அமைத்து விழாக்களை கொண்டாடுவர். மாணவர்களின் வயது உயரத்திர்கேற்றார் போல் ஒவ்வொரு வகுப்பிலும் இருக்கைகள்.
இவ்வழகிய பள்ளியின் அழகிய கரங்களுக்குள் ஆனந்தமாய் தவழ்ந்தது எனது ஆரம்பப் பள்ளிப்பருவம். ‘ப’ வடிவப் பள்ளிக்கட்டிடமோ அறைகள் அற்றது. உட்புறம் இடுப்பு உயர சுவர்களையே கொண்டது. ஒவ்வொரு வகுப்பும் பனைவோலையால் வேயப்பட்ட தகடுகளாலேயே பிரிக்கப்பட்டிருக்கும். மாணவர்கள் இதனை தட்டி என்று அழைப்பர். ‘பு’ வடிவக்கட்டிடம் சுவர்கள் அனைத்தும் உயர்ந்தவை. சாளரங்களும், கதவுகளும் கொண்டவை. இருப்பினும் இவைகள் தட்டிகளாலேயே பிரிக்கப்படிருக்கும். ஒன்று முதல் மூன்றாம் நிலை வரையுள்ள மாணவர்கள் ‘ப’ வடிவக்கட்டிடத்திலும், ஏனையோர் ‘பு’ வடிவக்கட்டிடத்திலும் படங்களை பயில்வர். இடம் பற்றாக்குறையால் நான்காம் நிலையின் ஒருபிரிவு மாணவர்கள் ‘ப’ வடிவக்கட்டிடத்தில் பாடங்களை பயில்வர்.
மழைக்காலம் மாணவர்களின் மனதிலும் மழைக்காலமே. புனித அந்தோனியார் ஆலய வளாகமே பள்ளியின் முற்றம். இதில் தான் ஊரார் அறுவடைக்காலத்தில் வைக்கோல் உலர்த்துவர். அதில் உதிரும் நெல்லானது மழைக்காலங்களில் முளைத்து, மணல் பரந்த ஆலய வளாகத்தை பசுமையாய் மாற்றிவிடும். களங்கமற்ற பிஞ்சு மனதிற்கு சொல்லியா தரவேண்டும் களிப்பதற்கும், சிரிப்பதற்கும்! நாற்றுகளை பார்த்தமாத்திரமே வயலுன்டாக்கி விளையாட ஆரம்பித்துவிடுவார்கள். ஆலய வளாகம் முழுதும் குழந்தைகளின் ஆரவாரம், மகிழ்ச்சியின் சலசலப்பு. நினைக்கவே ஆனந்தக்கண்ணீரை மல்கிட வைக்கும் அற்புத உணர்வு. பின்னொரு காலத்தில் நாட்டின் முதுகெலும்பாம் விவசாயத்தை குறைவுபட்டதாய் எண்ணப்போகும் மனிதனின் குழதைப்பருவ விவசாய விளையாட்டு. வாய்க்கால்கள் தோண்டி தேங்கிய மழைநீரை திறம்பட பாய்ச்சும் ஒரு சாரார் குழந்தைகள். அதை ஆவலுடன் கண்கொட்டாமல் பார்க்கும் மற்றொரு சாரார். போட்டிக்காக மற்றொரு வயலையும் வாய்க்காலையும் உருவாக்கும் பிறிதொரு சாரார். முளைத்த நெல்லின் பாலாகிப்போன அரிசியை உறிஞ்சி மகிழும் மற்றொரு சாரார்.
அறுவடைக்காலம் பள்ளியின் முற்றம் முழுதும் வைக்கோல். உலர்வதற்காக யாரோ சில ஊர் விவசாயிகளால் விரிக்கபட்டிருக்கும் வைக்கோல். இதுதான் குழந்தைகளின் சாகச கலைக்கூடம். என்னவிந்தை! பள்ளிக்கூடத்தின் முன் சாகச கலைக்கூடம். ஒரு மாணவன் தட்டுதடுமாறி கர்ணம் போட முயல்வான். பார்த்த மற்றொருகுழந்தை போட்டிக்கென கர்ணம் போட முயலும். அச்சம் விட்டு போட்டிப்போடும் குழந்தைகள் தாமாகவே ஓரிரு தினங்களில் கர்ணம் போடுவதில் வல்லவர்களாக மாறிவிடுவார்கள். அங்ஙனமே தலைகீழாக நிற்கவும் கற்றுக்கொள்வார்கள். வைக்கோல் உடலில் படுவதால் ஏற்படுத்தும் அரிப்புகளை எவருமே பொருட்படுத்துவது இல்லை.
வசந்த காலம், பள்ளியின் முற்றம் முழுதும் மாணவர்களின் கூட்டம். கவலையில்லாமல் விளையாடித்திரியும் குழந்தைகள். சடுகுடு ஆட்டம், நொண்டி விரட்டுதல், மூன்று குழிகளை கொண்டு கோலி ஆடுதல், ஆள் தாண்டுதல், கல்லா? மண்ணா?, விரட்டித்தொடுதல், இருகாளை வண்டி கட்டுதல், ஒருகாளை வண்டிகட்டுதல், இருகாளைவண்டிப்பந்தயம், சகமாணவனை தூக்கிகொண்டோடும் பந்தயம், சகமாணவனை தூக்கி சண்டையிடுதல் போன்றன குழந்தைகள் மத்தியில் பெரிதும் புகழ்பெற்ற விளையாட்டுக்கள்.
இடுப்புயரச் சுற்றுச் சுவர்கள் மாணவர்கள் இடைவேளைகளில் ஏறி குதித்து விளையாடுவதற்கு ஏதுவாக இருக்கும். ஒருவகுப்பின் அனைத்துப்பாடங்களும் ஒரே ஆசிரியரால் நடத்தப்படுமாகையால் வகுப்பசிரியர்களின் விடுப்பு மாணவர்களுக்கு களிப்பு. ஆனால் அதே வகுப்பானது சக வகுப்புடன் இணைக்கப்பட்டுவிடுவது பிஞ்சு முகத்தில் வாட்டத்தை ஏற்படுத்திவிடும். மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு ஆசிரியர்கள் மாணவர்களை விளையாடுவதற்காக அழைத்துச் செல்வதும் உண்டு. அனால் இந்த நல்வாய்ப்பு நான்காம், ஐந்தாம் நிலை மாணவர்களுக்கோ எட்டாக்கனியே.
ஆசிரியர்கள் மாணவர்களை விளையாட அழைத்துச் சென்றால் பெரும்பான்மையாக ‘குலை குலையாய் முந்திரிக்காய் என்ற விளையாட்டயே விளையாடும் படிச்செய்வர். வட்டமாக குழந்தைகள் உட்பக்கம் நோக்கி அமர்ந்திருப்பார்கள். ஒரு குழந்தை பண்டத்தை கொண்டு அவர்களை சுற்றி வரும். அங்ஙனம் சுற்றிவரும் சமயத்தில் ‘குலை குலையாய் முந்திரிக்காய்’ என்று அறிவித்துக்கொண்டே செல்லும் . அமர்ந்திருக்கும் குழந்தைகள் அதற்கு ‘யேம் பேரு பேரிக்கா’ என்று பதில் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். உட்கார்ந்திருக்கும் குழந்தையானது பின்புறம் கையை கட்டியவாறு அமர்ந்திருக்கும். சுற்றிவரும் குழந்தை பிறர் அறிந்துவிடா வண்ணம் தன் கைப்பண்டத்தை ஏதாவது ஒரு குழதையின் பின்புறம் வைத்துச்சென்றுவிடும். அந்தக்குழந்தை அதைக்கண்டுபிடித்து அதை எறிந்து விட வேண்டும் அன்றியோ வட்டமிடம் குழந்தை தனது அடுத்த சுற்றில் தனது பொருளை அக்குழந்தை திருடிவிட்டதை போல பாவித்து அதை விரட்டிவிட்டு அவ்விடத்தில் அமர்ந்துவிடும். பிறகு தனதுவிடத்தை இழந்த அக்குழந்தை பிறிதொரு இடத்தை அமர்வதர்க்காய் பெறும் பொருட்டு பண்டத்துடன் சுற்றிவரவேண்டிவரும். இவ்வாறு ஆட்டம் தொடரும். ஆனால் வளர்ந்த மாணவர்கள் இதை விட அதிகமாக உடலாற்றல் கொண்டு விளையாடும் விளையாட்டை விரும்புவதால். ஆசிரியர்கள் மாணவர்கள் தாங்கள் விரும்பும் விளையட்டை விளையாடும்படி விட்டு அவர்கள் தவறிழைக்கா வண்ணம் கண்காணிப்பர்.
பலபேருக்கு ஒற்றை காளை வண்டி, இரட்டைக்காளை வண்டி போன்ற விளையாட்டுகள் தெரியாதவைகளே! மாணவர்களின் கற்பனாவாற்றலின் ஒருமுகமாக பல வேளைகளில் நான் இதைக்கருதியது உண்டு. இரடைக்காளைவண்டி என்ற விளையாட்டை விளையாடுவதற்கு மூவர் வேண்டும். இருவர் அருகருகே நின்று இறுக்கமாய் கை கோத்துக் கொள்வர். மூன்றாமவன் தனது ஒரு காலை அதன்மேல் அவர்களின் பின்புறம் இருந்து போட்டுக்கொள்வான். முன்னிருந்து நோக்கின் கோத்தியக் கைகளிலிருந்து தொங்கும் முழங்காலானது. மாட்டுவண்டி நீளச்சு முன்புறம் வளைந்து முடிவதுபோன்று இருக்கும். மேலும் பின்னால் நிற்போன் தனது இரு கைகளையும் முன்னிருக்கும் இருவரின் தோளின் மேல் போட்டுக்கொள்வான் இது நுகம்போன்றவமைப்பை ஏற்படுத்தும். மேலும் பின்னால் ஒற்றைக்காலில் நிற்போனுக்கு இது நிலைப்பாட்டையும் கொடுக்கும். மொத்தத்தில் இவ்வமைப்பு முன்னிருவரையும் காளைகளாக கருதிப்பார்க்கின் இருகாளைகள் பூட்டிய மாட்டுவண்டி போன்று இருப்பதால் இது இரட்டைக்காளைவண்டி என அழைக்கப்படும்.
ஒற்றைக்காளை வண்டியில் ஒருவன் தனது கைகளை பின்னால் கோத்துக்கொள்வான். இன்னொருவன் பின்னிருந்து ஒற்றைக்காலை ஊடே இட்டு. தனது இரு கைகளால் முன்னவனது தோளை பிடித்துக்கொண்டு எஞ்சிய காலால் நிற்பான். இவ்வமைப்பும் பார்ப்பதற்கு ஒற்றை காளை மாட்டுவண்டி போலிருப்பதால் ஒற்றைகாளைவண்டி என்று பெயர். இவ்வண்டிகளை வைத்துக்கொண்டு போட்டிகளை நடத்துவதும் உண்டு. பின்னாலிருப்பவன் ஒற்றைக்காலால் ஓடுவதால் அவனால் வேகமாக ஓடவியலாது சிலசமயங்களில் அவர்களை தரதரவென இழுத்துக்கொண்டு முன்னாலிருப்பவர்கள்(ன்) ஓடுவதும் உண்டு. வேடிக்கையாக இருந்தாலும் குழந்தைகள் மாட்டுவண்டி போல ஒரு சிக்கலான அமைப்பை சககுழந்தையின் உதவிகொண்டு செய்வது வியாக்கும்படியானதே. யாரவது தன்னை இழிவாக பார்க்கிறார்களா என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் கபடற்ற உள்ளத்துடன் விளையாடும் குழந்தைகள்.
மெய்யாகவே ஒருசில விளையாட்டுகளில் நான் கெட்டிக்காரன். எப்படியாவது முதலில் வந்து விடுவேன். குறிப்பாக நொண்டிவிரட்டுதல், சகமாணவனை தூக்கிக்கொண்டு சண்டை இடுதல், ஆள் தாண்டுதல் போன்ற விளையாட்டுகள் நான் சிறப்பாக விளையாடும் விளையாட்டுகள். சகமானவனை முதுகில் தூக்கும் செயலை எனது ஊர் புறங்களில் சக்கா பழம் எடுத்தல் என்று சொல்வது உண்டு. அதனால் சகமாணவனை முதுகில் சுமந்து கொண்டு சண்டை இடுவதற்கு சக்கா பழம் சண்டை என்று சிறுவர்கள் நடுவில் பெயர் உண்டு. சக போட்டியாளர்களை இடித்தோ அல்லது முதுகில் சுமந்து கொண்டிருக்கும் நபரின் காலால் உதைத்தோ கீழே தள்ளிவிட வேண்டும். இதில் நான் மற்றும் எனது உடன் தோழன் ஜார்ஜ் டிட்டோ கூட்டணி வானுயர் கூட்டணி. எனது நண்பனை முதுகில் சுமந்து கொண்டு இறுக பிடித்துக்கொள்வேன் அவனும் உடும்பை போல் தோற்றிக்கொள்வான். எப்பாடு பட்டாவது விழாமல் நின்றுவிடுவேன். இது பார்ப்பதற்கு ஆபத்தானது போன்றிருந்தாலும் எனது அனுபவத்தில் மோசமான நிகழ்வை நான் பார்த்தது இல்லை. ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொழுது ஒருமுறை எட்டாம் வகுப்பு மாணவர்கள் திடீரென இப்போட்டியில் வரையறை இல்லாமல் நுழைய அவர்களுடனும் தோற்காது வென்றது இன்றும் நினைக்க தித்திப்பே. ஆனால் அன்று நான் நெஞ்சில் வாங்கிய உதையை எப்படியோ பெற்றோர்கள் அறிய அன்று வீட்டில் கேட்ட அச்சுறுத்தல் அதன் பிறகு ஒருகாலும் அவ்விளையாட்டை விளையாடாமல்செய்துவிட்டது.
நாட்கள் பள்ளம்நோக்கி பாயும் நீர்போல் பாய்ந்தோடியது. ஊர் வளர்ந்தது, செல்வம் அழகையை தொட்டிலில் ஆராட்டியது, ஓட்டுவீடுகள் ஒவ்வொன்றாக அருகிப்போகின. பள்ளிக்கூடத்திற்கும் இது விதிவிலக்கல்ல ஓட்டுக்கட்டிடம் மடிக்கட்டிடமானது. நஞ்சைவயல்கள் தென்னஞ்சோலைகளாகின, வைக்கோல் உலர்த்துதல் அரிதாகின. மாடிக்கட்டிடமாக மாற்றுவதற்காக பள்ளியை இடித்தனர். பள்ளி மேலுள்ள மாறா பற்று உடலைத் தான் பகையோன் பளுவாயுதத்தால் தாக்குவதுபோன்று நெஞ்சத்தை பதறசெய்தது. இளையோன் நான் என்ன செய்துவிடமுடியும் ஐயோ காலத்தின் சூழ்ச்சி என்றே பரிதவித்துக்கொண்டேன். நிழற்படமெடுக்கும் கருவி இல்லையே என்று முதன்முறையாக நான் வருந்தினேன். என்னை ஆளாக்கிய அந்த பள்ளிக்கூடத்தின் ஒருசெங்கல்லைக் கூட நான் மாற்ற விரும்பவில்லை.
இன்று பெரும்பாலும் குழந்தைகள் அத்தகைய விளையாட்டுகளை விளையாடுவது இல்லை. கருவிப்பொறி போல் ஆனது இன்றைய குழந்தைகள் வாழ்க்கை. தன் குழந்தை தாய்மொழி மறந்து அயல்மொழி பேசுவதை விரும்பும் பெற்றோர்களால் பள்ளிக்கூடம் என்ற பெயரை மட்டும் வைத்துக்கொண்டு வெறும் கட்டிடமாக மாறிக்கொண்டிருக்கும் எனது பள்ளிக்கூடம். தனது குழந்தையை புரிந்துகொள்ளும் ஆற்றலை இழந்து விட்ட பெரும்பான்மையான இன்றைய தாய்மார்கள் தனது குழந்தைக்கு சக மாணவர்களுடன் கொள்வதால் ஏற்படும் மகிழ்வை பொருட்படுத்தாது ஏட்டுச்சுரைக்காய்க்கு முன்னுரிமை கொடுப்பதால் இன்று குழந்தைகளுக்கு கூடி விளையாடுதல் இவற்றைபோன்றவற்றால் ஏற்படும் உண்மையான மகிழ்வு கிடைக்காமலேயே போய்கொண்டிருக்கிறது.

Advertisements