ஒக்ரோபர் 11, 2011

கன்னியாக்குமரியில் உள்ள தூய தமிழ் சொல்கள் (Pure Thamizh(Tamil)) words from kanniyakumari

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தூய தமிழ் சொல்கள் நாம் பல நேரத்தில் இவற்றை மலையாளம் என்று கருதுவோம்.

சாடு – பாய் (பாய்தல்)      ஆதாரம்: காண்க பாடல் 1 (அரிச்சந்திர புராணத்திலிருந்து)
உணக்கல் – காய செய்தல்    ஆதாரம்: காண்க பாடல் 2 (திருக்குறள்)
தகராறு – (ப்ரச்சனை என்று வடமொழியில் பலர் இதை கூறுவார்)
அலத்தல், அலப்பு – பேராசை, ஆசைநோய் – ஆதாரம்: காண்க பாடல் 3 (திருக்குறள்)
பீடு – பெருமிதம் ஆதாரம்: காண்க பாடல் 4 (திருக்குறள்)
பீலி – மயிலிறகு, இறகு ஆதாரம்: காண்க பாடல் 5 (திருக்குறள்)
ஓர்மை – உணர்வு, கருத்து, ஞாபகம். ஆதாரம்: காண்க பாடல் 6 (திருக்குறள்)
உறைப்பு – திண்ணம் (நிச்சயம்), ஆதாரம்: காண்க பாடல் 7 (பெரியபுராணம்)
அற்றம் – இறுதி, முடிவு, கரை ஆதாரம்: காண்க பாடல் 8 (திருக்குறள்)
அங்கணம் – உள்முற்றம், கழிவுநீர் மடை ஆதாரம்: காண்க பாடல் 9 (திருக்குறள்)
வெதுப்பு – சூடாக்கு ஆதாரம்: காண்க பாடல் 10 (கம்பராமாயணம்)

பாடல் 1

அதிபார தனபார அதிரூப மலர்மானை அனையாய் இவன்
நதிபாய உயர்போதின் நறைபாய நிறையாத சிறை வாவியில்
மதியாமல் வலைபீறி வேடிபோன பருவாளை வளைபூ கமேல்
குதிபாய மாடல்கீறி விழுதேறல் கரைசாடு குடநா டனே

– அரிச்சந்திர புராணம் 322

பாடல் 2

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.
– திருக்குறள்

பாடல் 3

அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்

– திருக்குறள் 1303

பாடல் 4

அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை

– திருக்குறள் 1014

பாடல் 5

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

– திருக்குறள் 475

பாடல் 6
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.

பாடல் 7

நின்றமறை யோர்கேளா நிலையழிந்த சிந்தையராய்
நன்றருளிச் செய்திலீர் நாணிலமண் பதகருடன்
ஒன்ரியாயமன் னவன்சூழ்ச்சி திருத்தொண்டி நுறைப்பாலே
வென்றவர்தந் திருபேரோ வேறொருபேர் எனவெகுள்வார்

– பெரியபுராணம் 1795

பாடல் 8

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்

– திருக்குறள் 421

பாடல் 9

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொள

– திருக்குறள் 720

பாடல் 10

வந்து கார் மழை தோன்றினும், மா மணிக்
கந்து காணினும், கைத்தலம் கூப்புமால்;
இந்து காந்தத்தின் ஈர நெடுங் கலும்
வெந்த காந்த, வெதுப்புறு மேனியாள்

– கம்பராமாயணம் 2811

திரிந்த தமிழ்சொல்கள்

சவுட்டு = சுவட்டு(சுவடு ஏற்படச்செய்) –> சவுட்டு(அகர உகர இடமாற்றம்)

  • போல்மம்: மிஞிறு = ஞிமிறு;

ஒலுங்கு = கொசுகு
துறையல் = திறவுகோல் –> துறையல்
தாக்கோல் = தாழ்கோல் –> தாக்கோல்
சாணாங்கி = சாணகம் –> சாணாங்கி
உச்சை = உச்சி பொழுது –> உச்சை பொழுது –> உச்சை
வெள்ளனே = காலையிலே
சால்ரா
வண்ணம் = பருமன் (நிறம் எனும் பொருள் தவறானது வடமொழியான வர்ணத்திலிருந்து வந்தது)

  • இதற்கு பொருட்டு என்று பொருள் உண்டு
  • பொருட்டாக கொள்ளப்படும் அளவிற்கு பருமன் உடையது எனும்பொருளில் வண்ணம் எனும் கையாளப்படுகிறது
  • ஓரளவிற்கு பருமனோ மதிப்போ இருந்தாலொழிய மக்கள் எதையும் பொருட்டே கொள்ளார்
Advertisements
குறிச்சொற்கள்: , ,
ஜனவரி 15, 2011

பொங்கல் தமிழ் புத்தாண்டன்று – pongal is not tamil (thamizh) new year

புவி ஞாயிறை ஒரு முறை சுற்றிவர ஆகும் காலமே ஓராண்டாகும் மேலும் புவியானது 23.5 பாகை சாய்ந்த அச்சில் சுற்றுவதால் ஆறு திங்கள் ஞாயிறு வடக்கு நோக்கியும் பின் ஆறு திங்கள் தெற்கு நோக்கியும் நகரும் இப்படி வடக்கே நகரும்போதும் தெற்கே நகரும்போதும் நண்பகல் நேரத்தில் ஞாயிறு தலை உச்சிக்கு நேர் வரும் இதுதான் ஓராண்டு ஆகிவிட்டது என்பதை கணிப்பதற்கான எளிய வழி

புத்தாண்டு என்பது ஓராண்டு முடிவை குறிப்பதற்கும் மறுவாண்டின் ஆரம்பத்தை சொல்வதற்குமேயாகும்.

ஞாயிறு பகலவன் எழுவான் பரிதி சூரியன்(வடமொழி) கீழ்மீன் இவ்வாறு பலவாறு குறிக்கப்படும் பகலவன் தலை உச்சிக்கு நேராக வரும் நாளினயே தமிழர்களாகிய நாம்(பெயரளவிலாவது) நிகழ்வாண்டின் முடிவாகவும் வருமாண்டின் ஆரம்பமாகவும் கொண்டிருக்கின்றோம் இவ்வழக்கு இந்தியாவின் வேறு மக்களிடமும் உண்டு
நாள்தோறும் ஞாயிறு நம் தலை உச்சிக்கு நேர் மேலாய் வருவதில்லை சிறிது வடக்கோ அல்லது தெற்கோ சாய்ந்த வண்ணமே வரும் ஞாயிறு இது சித்திரை என கூறப்படும் திங்களில்(மாதத்தில்) தான் தலைக்கு நேராக வருகிறது

ஆதாரம்
சித்திரை திங்கள் ஒரு கோடைக்காலம் ஞாயிறு தலைக்கு மேலாக வரும்பொழுது செங்குத்தாக ஞாயிற்றின் வெங்கதிர்கள் விழுவாதால் ஒரு குறிப்பிட்ட பரப்பில் விழும் கதிர்களின் அளவு அதிகரிப்பதால் அதிக வெம்மையும் மாறாக வடதென் பக்கம் சாய்ந்திருந்தால் அப்பரப்பில் விழும் கதிர்களின் அளவு குறைவதால் குறைந்த வெம்மையும் ஏற்படும்
மேலும் ஞாயிறு நம் தலை உச்சிக்கு நேர் மேலாய் வரும் நாளில் பகலிரவு பொழுதுகள் சரிசமமாய் இருக்கும் மேலும் இந்நாளில் நிலவு ஞாயிற்றின் நேரெதிர்த் திசையில் இருப்பின் ஏற்படும் முழுநிலவின் எழுதல் ஞாயிற்றின் மறைவின் போதும் ஞாயிற்றின் மறைவு எழுதலின் போதும் நிகழும் இதனால்தான் சித்திரை திங்களில் வரும் முழுநிலவின் எழுதலும் அடைதலும் ஏறக்குறைய ஞாயிற்றின் அடைதல் மற்றும் எழுதல் நேரத்திலேயே ஏற்படுகிறது இதுவே கன்னியாகுமரியில் சித்திரை திங்களில் ஞாயிறு நிலவு இவற்றின் எழுதல் அடைதல் அல்லது அடைதல் எழுதலை ஒரே நேரத்தில் காண முடிவதற்கு காரணம் (சித்திரை முழுநிலவு [சித்ராபௌர்ணமி] இதனாலேயே பெயர் பெற்றது).

பிற மாநிலத்தரும் இதை பின்பற்றுவதாலேயே அவர்களது புத்தாண்டும் சித்திரை திங்களிலேயே வருகிறது அவர்களது மாநிலத்தின் மையம் சற்று தமிழ்நாட்டின் மையத்திலிருந்து வடக்கோ தெற்கோ அமைந்திருப்பதால் வேறொரு நாள் புத்தாண்டாய் அமைகிறது

ஏது சரியான புத்தாண்டு
இலமூரியா கண்டம் தமிழ்நாட்டோடு இருந்த காலத்தில் அதன் பரப்பு மையம் வழி சென்ற கிழமேல் கோடு சற்றே தெற்கே அமைந்திருந்தது அக்காலத்தில் அது சித்திரை ஒன்றாக இருந்தது என்றும் இப்பொழுது அது சற்று வடதிசை அமைந்திருப்பதால் ஞாயிற்றின் கதிர்கள் செங்குத்தாய் சித்திரை திங்கள் பத்தாம் நாளில் தான் அக்கோட்டில் விழுவதாகவும் அதானால் சித்திரை பத்து என்பதே புத்தாண்டு என்பது பல ஆய்ந்து நோக்குபவர்கள் கருத்து ஆனால் அது அத்திங்களின் பிறப்பு இல்லை என்பதால் சித்திரை ஒன்றையே புத்தாண்டாய் கொள்ளலாம் என்பது அவர்கள் கருத்து.

நம்நாட்டு வழிவழி தலைமுறையை சாராத ஒருவன் நம்மொழி அறிந்து உயர் பதவி வகித்துவிடில் அவன் வாரத்தின் முதல் நாள் செவ்வாயே என விதி இயற்றின் அதை பொருட்டாய் கொள்வீரோ அங்ஙனம் கொளின் அது நம் அடிமைத்தனமன்றோ அய்யகோ

குறிப்பு – சித்திரை தமிழ்த்திங்களா என சரியாக தெரியவில்லை

ஜனவரி 10, 2011

தமிழன்னைப் பற்று

துடித்ததே நெஞ்சகம் நஞ்சகம் தன்னிலே
துஞ்சியெழுந்த தொரம்பு மாள துளைத்ததென்றே
எம்மவர் என்தமி ழன்னை யுனையே 
ஊனமாய் செய்திடுங் கால் 
 
போற்றிடுவார் நீயவர் தாயெனவே யாயினுஞ் 
சாற்றிடவோ ராடையுஞ் செய்யார் அணிந்திடவோ
ராயிரம் கலனுஞ்செய் வாரெனினும் நாணங்காத்
திடாஅர்நின் மக்களா தார்
 
அன்னையே யுனக்கோர் சிலைகண்டேன் மதுரைமா
நகரந்தனிலே கண்டிட்டோ ருள்ளம் மகிழ்ந்திடவே
துடித்திட்டேன் நீயதிலே போதாத வாடையுடனே
நாணித்துடித் துடித்திட்டல் கண்டு
 
மொழியாவ தெதுவென்றால் பகர்ந்திடவோ ரூடகந்தா
னென்பார றிந்திடவே சொல்லிடுவேன் திணைதந்து
முறைபுகட்டி வாழ்நெறி சொல்லிய தாயினது
திருத்தாள தற்குமே லென்று  
குறிச்சொற்கள்:
ஜனவரி 10, 2011

பறந்ததோ பழந்தான் – vivaegachinthaamaNi

தேனுகர் வண்டு மதுதனை உண்டு தியங்கியே கிடந்ததைக் கண்டு
தானதன் சம்புவின் கனியென் றதனை தடங்கையில் எடுத்துமுன் பார்த்தாள்
வானுறு மதியம் வந்ததென் றெண்ணி மலர்க்கரம் குவியுமென் றஞ்சிப்
போனது வண்டோ பறந்ததோ பழந்தான் புதுமையோ இதுவெனப் புகன்றாள்
                                                                                -விவேகசிந்தாமணி 19
 
சுவை சேர்ந்த விளக்கம்
தேனை விரும்பி உண்ணும் வண்டோ தேனை வயிறார உண்டுவிட்டு மயங்கிக்கிடந்ததை கண்ட எழில் மிகுந்தப் பெண் அதை நன்றாய் கனிந்த கருநிற நாவற்பழமென தன் காந்தள் மலர் கரங்களின் விரல்களினால் பற்றிஎடுத்து தன்னுளங்கையில் வைத்து உற்றுப்பார்க்கையில் தண்ணொளி கண்ணிடை தானுழைய கண்திறக்க அவள் முகம் கண்ட வண்டு அந்திப்போழுதாகி வானத்தில் நிலவு வந்துவிட்டது இதழ்கதவிதோ மூடி நாமிருக்கும் காந்தள் குவிந்து நமக்கது சிறையாகும் குன்றா முயற்சியுடனே நித்தம் நில்லாதியங்கும் நற்கோ பொற்கோ காலம்தனயே மதியது கணப் பொழுதிருப்பினும் கொளக்கொள கொண்டுண்ணும் காலனார் தானும் நீயும் வந்திடுவாய் தனை தந்திடுவாய் என்று சிறையுள்ளே நமை பெற்றிடுவார் என்றஞ்சியே இல்லம்நோக்கி அவ்வண்டு விரைய புதுமையாய் இந்நாவர்பழம் தானும் பறந்திடுதே என்று மலைய்த்துக் கூறினாள்//
 
விளக்கம் தினமணி இணையதளத்திலிருந்து
தமிழ் இலக்கிய வானில் பிற்காலத்தில் தோன்றிய நூல் விவேகசிந்தாமணி. நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களைக் கொண்ட அந்நூலின் ஆசிரியர் பெயர் காணப்படவில்லை.
 
பல பாடல்கள் நமது நீதி நூல்களில் காணும் வாழ்வியல் உண்மைகளை எளிய நடையில் தெளிவாக விளக்குகின்றன. இயற்கை நிகழ்ச்சிகளைக் கற்பனை நயத்துடன் படம்பிடித்துக் காட்டும் அற்புதமான பல பாடல்களும் இடம் பெறுகின்றன.

 

“குயில் கூவிக் கொண்டிருக்கும்; கோலம்மிக்க மயில் ஆடிக்கொண்டிருக்கும்; காற்றுக் குளிர்ந்தடிக்கும்; கண்ணாடிபோல் நீரூற்றுகள் மிக்கவுண்டு; பூக்கள் மலர்ந்து நிற்கும்; பூக்கள் தோறும் சென்று தேனீக்கள் இன்னிசை பாடிக் களிக்கும்’ என்று சஞ்சீவி பருவதத்தின் சாரலில் பாரதிதாசன் பாடியதுபோன்ற எழில்மிகு சோலை.

 

இக்காட்சிகளைக் கண்டு துய்க்கும் பேறுபெற்றாள் ஒரு நங்கை. பஞ்சினும் மெல்லிய தன் செஞ்சீறடி நோக இயற்கை அழகில் மயங்கி நின்றாள்.

 

அவளோ செந்தாமரை போன்ற செந்நிற மேனியாள்; மீனைப் பழித்த விழியாள்; அமுதம் பழித்த மொழியாள்; அன்னம் பழித்த நடையாள்; கன்னங்கருத்த குழலாள்; சின்னஞ் சிறுத்த இடையாள்; கள்ளங் கபடமற்ற உள்ளத்தாள்; கண்டோரைக் கொள்ளை கொள்ளும் எழிலரசி.

 

தன் கண்ணின் கருவிழியைப் பழிக்கும் இனிய கரிய நாவல் கனியொன்றைக் கண்டு நாவில் நீரூறச் சென்றாள். கொடியிடை துவளக் குனிந்து மலர்க்கையால் கனியை எடுத்தாள். அதுவோ கனியன்று; கருவண்டு. செந்தாமரை மலரில் அமர்ந்திருப்பது போன்ற உணர்வு மேலிட மேல் நோக்கிக் கண்டது. “அந்தோ! கண்முன் காணப்படுவது கவின் நிலவன்றோ? கணப்பொழுது கழிந்தாலும் நாம் சிறைப்படுவது உறுதி. மதியின் வரவு கண்டால் குவியுமன்றோ?’ என எண்ணிப் பறந்தது அந்த வண்டு.

 

தலைவி விழித்த கண் இமைக்காது வியப்பும், திகைப்பும் மேலிட, “போனது வண்டோ? பழந்தான் பறந்ததோ?’ என ஐயுற்றாள். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என ஏங்கினாள்.
நன்றி தினமணிஜனவரி 8, 2011

கூடாதார்க்குச் சொல்ல ஒண்ணாத அறிவுரைகள் – vivekachinthaamaNi

வானரம் மழைதனில் நனையத் தூக்கணம்
தானொரு நெறிசொலத் தாண்டிப் பிய்த்திடும்
ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும்
ஈனர்க்கு உரைத்திடில் இடர்அது ஆகுமே
-விவேகசிந்தாமணி 9

கற்பனை பூண்ட விளக்கம்:
(சற்றே சோமசுந்தரப் புலவரின் வழியை கடை பிடித்தலை பொறுத்துக்கொள்ளவும்)

காட்டிலே மழையைப் பார்த்து உளம் பூரித்துக் கொண்டிருந்த ஒரு தூக்கணம் குருவியானது அதிலே நனையும் குரங்கினைக்கண்டு பரிவு கொண்டது கூடு கட்டி அதிலே நனையாதிருந்த அத்தாய்க் குருவி குரங்கினை மழை பெருமானிடமிருந்து தப்புவித்துவிடும் நோக்கிலும் அதற்கு செய்யவேண்டியது என்னவென்பதை உணர்த்தும் ஆர்வத்திலும் நன்றாய் சிந்தித்து உன்னெதிர்காலம் எண்ணாது கொம்பில் தாவி மகிழ்ந்திருந்த பொழுது  பின்னாபத்துக்கருதி என்போல் ஒரு வீடுகட்டியிருப்பீரானால் உலகுய்ய வளம்கொடுக்கும் இம்மழை மணவாளன் நிலப்பெண்ணை மணக்கும் இம்மகிழ்வான விழாவினை உள்ளிருந்தே கண்டு சுற்றத்துடன் உவந்திருக்கலாமே ஆனதானதேயாயினும் இனியாவது பின்னழிவு நேராது முன்காப்பீர் இப்பொழுதோ அன்னெடும் பனைமரத்து பழுத்துதிர்ந்த ஓலைதனை தலைமேலுயர்த்திப் பிடித்து அதன்கீழ் மழைக்கு ஓரம்போவீர் என்று ஓரறிவுரை தாயுள்ளத்துடன் சொல்லிடவே மழைக்கு மறைந்திடவே ஓரிடமில்லா என்னிலைகண்டு மனமிரங்காது நகைப்புற்று தன்னறிவுக்காட்டிட அறிவுரை சொல்லிடுதே செருக்குடை இச்சிறுக்குருவிதானுமெனத் தவறாயெண்ணிய குரங்கோ அக்குருவியின் உள்ளுணர்வுணராது பேரறிவாளன் எனக்கிவ் வைந்தறிவுள்ளக் குருவி தானும் என்னைவிட மிகுந்த அறிவு கொண்டான் போல் செருக்கு உளம் நிறைய என்னிலைக்கு நகைத்து அறிவுரைப்பதேன் தான் மழை நனையாது நான் மழை நனைந்திடதானன்றோ என்று வெகுண்டுரைத்து தான் நனைந்திடில் இங்ஙனம் தான் எண்ணுமோ என்று கடிந்து சொல்லி தன்செயல் விளைவு எண்ணாது தூங்கும் கூட்டில் தூங்கும் குஞ்சுகளின் பாடுபாராது கண்ணிமைப்பொழுதில் தாவிப்பிய்த்தது பாடம் புகட்டிட இன்றே பிறந்த என்னருமைக் குஞ்சுகள்போலுன் பிள்ளைகள் தான் தன்னை பார்த்ததாலன்றோ உன்னின்னா நீக்க நான் சொன்னேன் என்று குருவிதன் வாயாற்சொல்லுமுன் வீழ்ந்தனக் குஞ்சுகள் வீடுடைந்ததால் தரையிலேயே

மழைக் கோமகன் நிலக்கொமகள் தன்னை கொள்ளும் பொழுது மேகக்கோன் செய்த தோரணமாய் வந்த மின்னல் தொடங்கி முடிந்திடுமுன்னே தன்னிலை தலைகீழாய் போனதுணர்ந்த அச்சிறுப்புள் தன்னுணர்வு குரங்கறியச்சொல்லிவிட்டு ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும் தகுதியற்றோர் தனக்குரைக்கின் தான் கெட்டு தன்குலமுமன்றோ கெட்டிடுமென்று வருந்தி கீழ்வீழ்ந்து காயம்கொண்ட தன் குழந்தைகளை தன் இணையுடன் சேர்ந்து தன்சிறகால் தழுவி கண்கலங்க மிகுந்தவன்புடன் தலையால் அணைத்துக்கொண்டது.

ஜூலை 31, 2010

எனது ஆரம்ப பள்ளிப்பருவம்:

அழகப்பபுரம் என்பது பெயருக்கு ஏற்றார் போல் அழகாக இருந்தது. அங்கே பழமையின் நினைவுச்சின்னமாக இருந்தது புனித அந்தோனியார் ஆரம்பப்பள்ளி. இன்றும் பசுமை மாறா நினைவுகளை தரும் அந்தப்பள்ளி ஒட்டுக்கூரையை கொண்ட ஒரு ‘ப’ வடிவக் கட்டிடத்தையும், ஒரு தலைகீழ் ‘பு’ வடிவக்கத்டிடத்தையும்கொண்டிருந்தது . ‘ப’ வடிவக் கட்டியாத்ம சற்று பெரியது. அதன் இருபக்கங்களும் நெடியது. அதன் நடுவில் பள்ளிவளாகம். ‘பு’ வடிவக் கட்டிடம் சற்று சிறியது. அதன் மூன்று கரங்களாய் அமைந்த பக்கங்களும் குறுகியது. அதன் வாய்ப்பகுதியில் அரங்கம் அமைத்து விழாக்களை கொண்டாடுவர். மாணவர்களின் வயது உயரத்திர்கேற்றார் போல் ஒவ்வொரு வகுப்பிலும் இருக்கைகள்.
இவ்வழகிய பள்ளியின் அழகிய கரங்களுக்குள் ஆனந்தமாய் தவழ்ந்தது எனது ஆரம்பப் பள்ளிப்பருவம். ‘ப’ வடிவப் பள்ளிக்கட்டிடமோ அறைகள் அற்றது. உட்புறம் இடுப்பு உயர சுவர்களையே கொண்டது. ஒவ்வொரு வகுப்பும் பனைவோலையால் வேயப்பட்ட தகடுகளாலேயே பிரிக்கப்பட்டிருக்கும். மாணவர்கள் இதனை தட்டி என்று அழைப்பர். ‘பு’ வடிவக்கட்டிடம் சுவர்கள் அனைத்தும் உயர்ந்தவை. சாளரங்களும், கதவுகளும் கொண்டவை. இருப்பினும் இவைகள் தட்டிகளாலேயே பிரிக்கப்படிருக்கும். ஒன்று முதல் மூன்றாம் நிலை வரையுள்ள மாணவர்கள் ‘ப’ வடிவக்கட்டிடத்திலும், ஏனையோர் ‘பு’ வடிவக்கட்டிடத்திலும் படங்களை பயில்வர். இடம் பற்றாக்குறையால் நான்காம் நிலையின் ஒருபிரிவு மாணவர்கள் ‘ப’ வடிவக்கட்டிடத்தில் பாடங்களை பயில்வர்.
மழைக்காலம் மாணவர்களின் மனதிலும் மழைக்காலமே. புனித அந்தோனியார் ஆலய வளாகமே பள்ளியின் முற்றம். இதில் தான் ஊரார் அறுவடைக்காலத்தில் வைக்கோல் உலர்த்துவர். அதில் உதிரும் நெல்லானது மழைக்காலங்களில் முளைத்து, மணல் பரந்த ஆலய வளாகத்தை பசுமையாய் மாற்றிவிடும். களங்கமற்ற பிஞ்சு மனதிற்கு சொல்லியா தரவேண்டும் களிப்பதற்கும், சிரிப்பதற்கும்! நாற்றுகளை பார்த்தமாத்திரமே வயலுன்டாக்கி விளையாட ஆரம்பித்துவிடுவார்கள். ஆலய வளாகம் முழுதும் குழந்தைகளின் ஆரவாரம், மகிழ்ச்சியின் சலசலப்பு. நினைக்கவே ஆனந்தக்கண்ணீரை மல்கிட வைக்கும் அற்புத உணர்வு. பின்னொரு காலத்தில் நாட்டின் முதுகெலும்பாம் விவசாயத்தை குறைவுபட்டதாய் எண்ணப்போகும் மனிதனின் குழதைப்பருவ விவசாய விளையாட்டு. வாய்க்கால்கள் தோண்டி தேங்கிய மழைநீரை திறம்பட பாய்ச்சும் ஒரு சாரார் குழந்தைகள். அதை ஆவலுடன் கண்கொட்டாமல் பார்க்கும் மற்றொரு சாரார். போட்டிக்காக மற்றொரு வயலையும் வாய்க்காலையும் உருவாக்கும் பிறிதொரு சாரார். முளைத்த நெல்லின் பாலாகிப்போன அரிசியை உறிஞ்சி மகிழும் மற்றொரு சாரார்.
அறுவடைக்காலம் பள்ளியின் முற்றம் முழுதும் வைக்கோல். உலர்வதற்காக யாரோ சில ஊர் விவசாயிகளால் விரிக்கபட்டிருக்கும் வைக்கோல். இதுதான் குழந்தைகளின் சாகச கலைக்கூடம். என்னவிந்தை! பள்ளிக்கூடத்தின் முன் சாகச கலைக்கூடம். ஒரு மாணவன் தட்டுதடுமாறி கர்ணம் போட முயல்வான். பார்த்த மற்றொருகுழந்தை போட்டிக்கென கர்ணம் போட முயலும். அச்சம் விட்டு போட்டிப்போடும் குழந்தைகள் தாமாகவே ஓரிரு தினங்களில் கர்ணம் போடுவதில் வல்லவர்களாக மாறிவிடுவார்கள். அங்ஙனமே தலைகீழாக நிற்கவும் கற்றுக்கொள்வார்கள். வைக்கோல் உடலில் படுவதால் ஏற்படுத்தும் அரிப்புகளை எவருமே பொருட்படுத்துவது இல்லை.
வசந்த காலம், பள்ளியின் முற்றம் முழுதும் மாணவர்களின் கூட்டம். கவலையில்லாமல் விளையாடித்திரியும் குழந்தைகள். சடுகுடு ஆட்டம், நொண்டி விரட்டுதல், மூன்று குழிகளை கொண்டு கோலி ஆடுதல், ஆள் தாண்டுதல், கல்லா? மண்ணா?, விரட்டித்தொடுதல், இருகாளை வண்டி கட்டுதல், ஒருகாளை வண்டிகட்டுதல், இருகாளைவண்டிப்பந்தயம், சகமாணவனை தூக்கிகொண்டோடும் பந்தயம், சகமாணவனை தூக்கி சண்டையிடுதல் போன்றன குழந்தைகள் மத்தியில் பெரிதும் புகழ்பெற்ற விளையாட்டுக்கள்.
இடுப்புயரச் சுற்றுச் சுவர்கள் மாணவர்கள் இடைவேளைகளில் ஏறி குதித்து விளையாடுவதற்கு ஏதுவாக இருக்கும். ஒருவகுப்பின் அனைத்துப்பாடங்களும் ஒரே ஆசிரியரால் நடத்தப்படுமாகையால் வகுப்பசிரியர்களின் விடுப்பு மாணவர்களுக்கு களிப்பு. ஆனால் அதே வகுப்பானது சக வகுப்புடன் இணைக்கப்பட்டுவிடுவது பிஞ்சு முகத்தில் வாட்டத்தை ஏற்படுத்திவிடும். மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு ஆசிரியர்கள் மாணவர்களை விளையாடுவதற்காக அழைத்துச் செல்வதும் உண்டு. அனால் இந்த நல்வாய்ப்பு நான்காம், ஐந்தாம் நிலை மாணவர்களுக்கோ எட்டாக்கனியே.
ஆசிரியர்கள் மாணவர்களை விளையாட அழைத்துச் சென்றால் பெரும்பான்மையாக ‘குலை குலையாய் முந்திரிக்காய் என்ற விளையாட்டயே விளையாடும் படிச்செய்வர். வட்டமாக குழந்தைகள் உட்பக்கம் நோக்கி அமர்ந்திருப்பார்கள். ஒரு குழந்தை பண்டத்தை கொண்டு அவர்களை சுற்றி வரும். அங்ஙனம் சுற்றிவரும் சமயத்தில் ‘குலை குலையாய் முந்திரிக்காய்’ என்று அறிவித்துக்கொண்டே செல்லும் . அமர்ந்திருக்கும் குழந்தைகள் அதற்கு ‘யேம் பேரு பேரிக்கா’ என்று பதில் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். உட்கார்ந்திருக்கும் குழந்தையானது பின்புறம் கையை கட்டியவாறு அமர்ந்திருக்கும். சுற்றிவரும் குழந்தை பிறர் அறிந்துவிடா வண்ணம் தன் கைப்பண்டத்தை ஏதாவது ஒரு குழதையின் பின்புறம் வைத்துச்சென்றுவிடும். அந்தக்குழந்தை அதைக்கண்டுபிடித்து அதை எறிந்து விட வேண்டும் அன்றியோ வட்டமிடம் குழந்தை தனது அடுத்த சுற்றில் தனது பொருளை அக்குழந்தை திருடிவிட்டதை போல பாவித்து அதை விரட்டிவிட்டு அவ்விடத்தில் அமர்ந்துவிடும். பிறகு தனதுவிடத்தை இழந்த அக்குழந்தை பிறிதொரு இடத்தை அமர்வதர்க்காய் பெறும் பொருட்டு பண்டத்துடன் சுற்றிவரவேண்டிவரும். இவ்வாறு ஆட்டம் தொடரும். ஆனால் வளர்ந்த மாணவர்கள் இதை விட அதிகமாக உடலாற்றல் கொண்டு விளையாடும் விளையாட்டை விரும்புவதால். ஆசிரியர்கள் மாணவர்கள் தாங்கள் விரும்பும் விளையட்டை விளையாடும்படி விட்டு அவர்கள் தவறிழைக்கா வண்ணம் கண்காணிப்பர்.
பலபேருக்கு ஒற்றை காளை வண்டி, இரட்டைக்காளை வண்டி போன்ற விளையாட்டுகள் தெரியாதவைகளே! மாணவர்களின் கற்பனாவாற்றலின் ஒருமுகமாக பல வேளைகளில் நான் இதைக்கருதியது உண்டு. இரடைக்காளைவண்டி என்ற விளையாட்டை விளையாடுவதற்கு மூவர் வேண்டும். இருவர் அருகருகே நின்று இறுக்கமாய் கை கோத்துக் கொள்வர். மூன்றாமவன் தனது ஒரு காலை அதன்மேல் அவர்களின் பின்புறம் இருந்து போட்டுக்கொள்வான். முன்னிருந்து நோக்கின் கோத்தியக் கைகளிலிருந்து தொங்கும் முழங்காலானது. மாட்டுவண்டி நீளச்சு முன்புறம் வளைந்து முடிவதுபோன்று இருக்கும். மேலும் பின்னால் நிற்போன் தனது இரு கைகளையும் முன்னிருக்கும் இருவரின் தோளின் மேல் போட்டுக்கொள்வான் இது நுகம்போன்றவமைப்பை ஏற்படுத்தும். மேலும் பின்னால் ஒற்றைக்காலில் நிற்போனுக்கு இது நிலைப்பாட்டையும் கொடுக்கும். மொத்தத்தில் இவ்வமைப்பு முன்னிருவரையும் காளைகளாக கருதிப்பார்க்கின் இருகாளைகள் பூட்டிய மாட்டுவண்டி போன்று இருப்பதால் இது இரட்டைக்காளைவண்டி என அழைக்கப்படும்.
ஒற்றைக்காளை வண்டியில் ஒருவன் தனது கைகளை பின்னால் கோத்துக்கொள்வான். இன்னொருவன் பின்னிருந்து ஒற்றைக்காலை ஊடே இட்டு. தனது இரு கைகளால் முன்னவனது தோளை பிடித்துக்கொண்டு எஞ்சிய காலால் நிற்பான். இவ்வமைப்பும் பார்ப்பதற்கு ஒற்றை காளை மாட்டுவண்டி போலிருப்பதால் ஒற்றைகாளைவண்டி என்று பெயர். இவ்வண்டிகளை வைத்துக்கொண்டு போட்டிகளை நடத்துவதும் உண்டு. பின்னாலிருப்பவன் ஒற்றைக்காலால் ஓடுவதால் அவனால் வேகமாக ஓடவியலாது சிலசமயங்களில் அவர்களை தரதரவென இழுத்துக்கொண்டு முன்னாலிருப்பவர்கள்(ன்) ஓடுவதும் உண்டு. வேடிக்கையாக இருந்தாலும் குழந்தைகள் மாட்டுவண்டி போல ஒரு சிக்கலான அமைப்பை சககுழந்தையின் உதவிகொண்டு செய்வது வியாக்கும்படியானதே. யாரவது தன்னை இழிவாக பார்க்கிறார்களா என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் கபடற்ற உள்ளத்துடன் விளையாடும் குழந்தைகள்.
மெய்யாகவே ஒருசில விளையாட்டுகளில் நான் கெட்டிக்காரன். எப்படியாவது முதலில் வந்து விடுவேன். குறிப்பாக நொண்டிவிரட்டுதல், சகமாணவனை தூக்கிக்கொண்டு சண்டை இடுதல், ஆள் தாண்டுதல் போன்ற விளையாட்டுகள் நான் சிறப்பாக விளையாடும் விளையாட்டுகள். சகமானவனை முதுகில் தூக்கும் செயலை எனது ஊர் புறங்களில் சக்கா பழம் எடுத்தல் என்று சொல்வது உண்டு. அதனால் சகமாணவனை முதுகில் சுமந்து கொண்டு சண்டை இடுவதற்கு சக்கா பழம் சண்டை என்று சிறுவர்கள் நடுவில் பெயர் உண்டு. சக போட்டியாளர்களை இடித்தோ அல்லது முதுகில் சுமந்து கொண்டிருக்கும் நபரின் காலால் உதைத்தோ கீழே தள்ளிவிட வேண்டும். இதில் நான் மற்றும் எனது உடன் தோழன் ஜார்ஜ் டிட்டோ கூட்டணி வானுயர் கூட்டணி. எனது நண்பனை முதுகில் சுமந்து கொண்டு இறுக பிடித்துக்கொள்வேன் அவனும் உடும்பை போல் தோற்றிக்கொள்வான். எப்பாடு பட்டாவது விழாமல் நின்றுவிடுவேன். இது பார்ப்பதற்கு ஆபத்தானது போன்றிருந்தாலும் எனது அனுபவத்தில் மோசமான நிகழ்வை நான் பார்த்தது இல்லை. ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொழுது ஒருமுறை எட்டாம் வகுப்பு மாணவர்கள் திடீரென இப்போட்டியில் வரையறை இல்லாமல் நுழைய அவர்களுடனும் தோற்காது வென்றது இன்றும் நினைக்க தித்திப்பே. ஆனால் அன்று நான் நெஞ்சில் வாங்கிய உதையை எப்படியோ பெற்றோர்கள் அறிய அன்று வீட்டில் கேட்ட அச்சுறுத்தல் அதன் பிறகு ஒருகாலும் அவ்விளையாட்டை விளையாடாமல்செய்துவிட்டது.
நாட்கள் பள்ளம்நோக்கி பாயும் நீர்போல் பாய்ந்தோடியது. ஊர் வளர்ந்தது, செல்வம் அழகையை தொட்டிலில் ஆராட்டியது, ஓட்டுவீடுகள் ஒவ்வொன்றாக அருகிப்போகின. பள்ளிக்கூடத்திற்கும் இது விதிவிலக்கல்ல ஓட்டுக்கட்டிடம் மடிக்கட்டிடமானது. நஞ்சைவயல்கள் தென்னஞ்சோலைகளாகின, வைக்கோல் உலர்த்துதல் அரிதாகின. மாடிக்கட்டிடமாக மாற்றுவதற்காக பள்ளியை இடித்தனர். பள்ளி மேலுள்ள மாறா பற்று உடலைத் தான் பகையோன் பளுவாயுதத்தால் தாக்குவதுபோன்று நெஞ்சத்தை பதறசெய்தது. இளையோன் நான் என்ன செய்துவிடமுடியும் ஐயோ காலத்தின் சூழ்ச்சி என்றே பரிதவித்துக்கொண்டேன். நிழற்படமெடுக்கும் கருவி இல்லையே என்று முதன்முறையாக நான் வருந்தினேன். என்னை ஆளாக்கிய அந்த பள்ளிக்கூடத்தின் ஒருசெங்கல்லைக் கூட நான் மாற்ற விரும்பவில்லை.
இன்று பெரும்பாலும் குழந்தைகள் அத்தகைய விளையாட்டுகளை விளையாடுவது இல்லை. கருவிப்பொறி போல் ஆனது இன்றைய குழந்தைகள் வாழ்க்கை. தன் குழந்தை தாய்மொழி மறந்து அயல்மொழி பேசுவதை விரும்பும் பெற்றோர்களால் பள்ளிக்கூடம் என்ற பெயரை மட்டும் வைத்துக்கொண்டு வெறும் கட்டிடமாக மாறிக்கொண்டிருக்கும் எனது பள்ளிக்கூடம். தனது குழந்தையை புரிந்துகொள்ளும் ஆற்றலை இழந்து விட்ட பெரும்பான்மையான இன்றைய தாய்மார்கள் தனது குழந்தைக்கு சக மாணவர்களுடன் கொள்வதால் ஏற்படும் மகிழ்வை பொருட்படுத்தாது ஏட்டுச்சுரைக்காய்க்கு முன்னுரிமை கொடுப்பதால் இன்று குழந்தைகளுக்கு கூடி விளையாடுதல் இவற்றைபோன்றவற்றால் ஏற்படும் உண்மையான மகிழ்வு கிடைக்காமலேயே போய்கொண்டிருக்கிறது.

பிப்ரவரி 24, 2010

தமிழின் சுவை – எனது முதல் கவிதை

நாஞ்சி லெங்கு மோடி யுறுமல
ராய்ந்து நுண்ணீ திரட்டிய பூமது
வதுவை சொரிந்தே கருத்தா யன்னை
ஆக்கிய தீந்தெள் ளமுதே

நின்னை யானருந் திடுங்கால் அகத்தே
திகட்டுமோ தீஞ்சுவை என்றே வெரூவினும்
கனல்சுடு வயிறுடை அன்றலர் பச்சிளஞ்
சிசுதாய் சினை விடா

தாய்ப்பால் பிஞ்சுக்குத் திகட்டா தீஞ்சுவை
எவர்க்குமே திகட்டா தமிழே நீகொடு
உணர்வு பாலுண்ணும் சேயதோ வதுகொடு
தாயதோ உணர்ந்தான் யார்?

பொருள்:
முதல் பாடல்:

நாஞ்சில் என்பது கன்னியாகுமரி பகுதியை குறிக்கும்.
அது ஐவகை நிலங்களையும் உள்ளடக்கியது. எனவே “நாஞ்சி லெங்கு மோடி” எனும் அடிக்கு ஐவகை நிலங்களுக்கும் சென்று என பொருள் கொள்ளலாம். “யுறுமல ராய்ந்து” என்பது தகுந்த மலர்களை ஆராய்ந்து தெரிந்து என பொருள் படும்.
நுண்ணீ = தேனீ.
திரட்டிய = சேர்த்த.
பூமது வதுவை = மலரின் தேனினை.
சொரிந்தே = கொடுத்தே (சேர்த்தே)
கருத்தா யன்னை ஆக்கிய தீன்தெள் ளமுதே (கருத்தை அன்னை ஆகிய தீன் தெள் அமுதே)
= கருத்துடன் அன்னை உண்டாக்கிய இனிய சிறந்த அமுதமே (பாயசமே).

தொகுந்த விளக்கம்:

கன்னியாகுமரி எனும் ஐவகை நிலங்களும் அடங்கிய பகுதியிலே அலைந்து திரிந்து, அங்குள்ள அத்தனை மலர்களிலும் எவை தகுதியான சிறந்த (இனிய தேனை கொண்டுள்ள) மலர்கள் என ஆராய்ந்து அவைகளிலிருந்து தேனீ தேனை சேகரிக்கிறது. அவ்வண்ணம் தேனீ சேகரித்த மலரின் தேனை ஊற்றி அன்னை பிள்ளைக்கு கவனமாக தயாரித்த பாயசமே.

(இத்தகைய சிறப்புகள் உள்ள) உன்னை நான் அருந்திடும் போது என் மனதிலே நீ மிகுதியான இனிய சுவையினால் திகட்டிவிடுவாய் என்று நான் அஞ்சினாலும் (இச்சமயம் என் எண்ணம் தமிழ் மேல் செல்கிறது) பசியின் பொருட்டு வயிற்றிலே கொள்ளிக்கட்டையை வைத்தாற்போல் உணர்கின்ற பசியை தாங்க முடியாத இன்று பிறந்த குழந்தையானது பாலுண்ணும் பொருட்டு தாயின் உறுப்பை பற்றிவிட்டால் அதை விடாது.

(அந்நிலையில்) தாய்ப்பால் குழந்தைக்கு திகட்டாததை (இயல்பாகவே தாய்ப்பால் குழந்தைக்கு திகட்டாது இந்நிலைமையில் அதன்மேல் குடிக்க குடிக்க ஆர்வமே மிகுந்து கொண்டிருக்கும்) போன்று இனிய சுவை (ஆயினும்) எவர்க்கும் திகட்டாத தமிழே நீ தருகின்ற இனிய உணர்வானது பாலை விரும்பி உண்ணும் பச்சிளங்குழந்தை கொண்டுள்ள ஆர்வமிக்க அன்புடன் கலந்த உணர்வா? அல்லது தாய் அன்புடன் பாலுட்டும் போது உணரும் ஆனந்த உணர்வா? இதை யார் அறிவார்?

நன்றி:
“உணர்வார் உளரோ” என்று வெண்பா இலக்கணத்திற்கு பொருந்தாத முடிவை “உணர்ந்தான் யார்” என்று பொருந்தும்படியாக மாற்றி தந்த என்னுடன் பிறந்த அருமைச் சகோதரருக்கு நன்றி.

குறிப்பு
‘உளரோ’ என்பது ‘நிரைநேர்’ என்று இருந்தாலும் ‘பிறப்பு’ அல்லது ‘நிரைபு’ எனும் வெண்பா ஈற்றடி வாய்ப்பட்டிற்கு பொருந்துவதாக இல்லை

குறிச்சொற்கள்:
பிப்ரவரி 24, 2010

தினம் பத்து தமிழ்ச் சொற்கள்

பிறமொழிச் சொல்லுக்கான தூய தமிழ்ச் சொல்

…அங்காடி = கடைத்தெரு

…அகிம்சை = மென்முறை

…உபயோகம் = பயன்பாடு

…கவசம் = கேடயம்

…கஷ்டம் = இடர்பாடு

…காலரா = 1:நீர்கம்முதல் 2:நீர்க்கம்பு

…சட்டை = அங்கி

…சந்தேகம் = ஐயம்

…சுத்தம் = தூய்மை

…துவக்கம் = தொடக்கம், ஆரம்பம்

நட்டம் (நஷ்டம்) = இழப்பு

…நீதி = முறை

…ப்ரச்சனை = 1:தகராறு  2:குடைச்சல் 3:கோளாறு

பெஞ்ச் = அமர்வாயம்

…பேனா = எழுதுபீலி, தூவல்

…மாதம் = திங்கள்

…மைதானம் = திடல்

லாபம் = ஆதாயம்

வருடம் = ஆண்டு

…வாரம் = கிழமை

…விபச்சாரி = பரத்தை

 

இங்க்லிஷிலிருந்து தமிழ் (English to Thamizh)

Announce = அறிவிப்பு

Turbulance  = அமளி (பாய் பொருளில் ஏற்படுவது)

Break fast = அற்றாலம்

Dinner = முற்றாலம்

Problem  = தகராறு, கோளாறு, குடக்கம், குடைசல், சிக்கல்

Year = ஆண்டு

பிப்ரவரி 21, 2010

கலாச்சார உடை,

அன்பு வாசகர்களுக்கு, கருணை கூர்ந்து இதை முற்றிலும் படிக்கவும். இந்தப் பக்கத்தை நான் தட்டச்சு செய்கையில் எனக்கு பல்வேறு குழப்பங்களும், சிந்தனைகளும் இருந்தன. இருந்தபோதிலும் ஒழுக்கத்திற்கும், நமது பாரம்பரியத்திற்கும் இடையூறான ஒன்றையும் நான் எழுதப் போவதில்லை என்ற எண்ணம் மேலோங்கவே இதை தொடர்கிறேன். இந்தப்பக்கமானது நம் வாசகர்கள் தெளிவு பெறுவதற்காகவே இடப்படுகிறது.

நவ நாகரிகம் என்ற பெயரில் இன்றைய கலாச்சாரம் அநாகரிகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை நாம் அறியாமல் இல்லை. “எப்படி வாழ்ந்தால் என்ன? நான் எப்படி இருந்தால் என்ன? பார்ப்பவர்களுக்கு மனக்கட்டுப்பாடு இருந்தால் போதும். ஒழுக்கம் என்பது பார்ப்பவர்கள் கண்ணில் தான் இருக்கிறது. இதில் அறிவியல் ரீதியாக எந்தக் குற்றமும் இல்லை” எவ்வாறு பகுத்தறிவாளர்களைப்போல் போல் வாதாடுபவர்கள் நம்மில் பலபேர். ஐந்தறிவுள்ள விலங்குகளை ஆறறிவுள்ள மனிதர்களோடு ஒப்பிட துணிந்துவிட்ட அதி மேதாவிகள் இவர்கள். இவ்வாறு எழும் கேள்விகளுக்கு இனி ஒவ்வொன்றாக பதில்களை பார்ப்போம்.

நமது கலாச்சாரம் தான் விகற்பமான ஆடை தரித்திருப்பவர்கள் மேல் தவறான பார்வை கொள்ள வைக்கிறதா?
“நமது கலாச்சாரம் தான் விகற்பமான ஆடை தரிப்பவர்களை தவறாக பார்க்க வைக்கிறதா?” என்ற ஐயத்தை இன்று பாரம்பரிய விருமிபிகளிடமும் ஏற்படுத்திவிட்டார்கள் நமது நவீன விரும்பிகள். ஏறக்குறைய ஒரு ஆண்டிற்கு முன் “Times of India” நாளிதழில் வெளியிட்டிருந்த இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவு “Women in bikini makes the men to look at them as an object” (குறை ஆடைகளிலிருக்கும் பெண்கள், ஆண்கள் தங்களை ஒரு காட்சிப் பொருட்களாகவே பார்க்கச்செய்கிறார்கள்). இதன் உட்கருத்து விளக்கம் இன்றியே உங்களுக்கு விளங்கியிருக்கும். இருப்பினும் விளக்குவது கடமை. பொதுவான அவர்கள் ஆராய்ச்சிமுடிவு நாடுகள் கடந்தது. குறிப்பாக அவர்கள் நாட்டு மக்களையே ஆராய்ச்சிக்கு உட்படுத்தி எடுக்கப்பட்டது. எனவே விகற்பமான ஆடைகள் அவர்களின் உணர்வுகளையும் தூண்டுகிறது என்றே கொள்ளலாம். மனிதனின் கண்களுக்கு வித்தியாசமானவைகள் எளிதாய் தெரியும். ஆயிரம் பானைகளிருக்கும் போதும் ஒரு பானை உடைந்திருந்தால் அதுதான் கண்களுக்கு எளிதில் புலனாகும். போன்றே, விகற்பமான ஆடை அணிபவர்கள் நமதூரில் அரிதே. ஆகையால் அவைகளே நம் கண்களுக்கு எளிதில் புலனாகும், நம் பார்வையையும் ஈர்க்கும். வெளிநாடுகளில் அது பழகிப்போன காரியம் அதனால் அவர்களின் தனிக்கவனத்தை அது தூண்டாத போதிலும் மேற்கண்ட ஆராய்ச்சி முடிவு, அவர்களின் உணர்வுகளை தூண்டுவதை உறுதி செய்கிறது.
மேலும் 19-02-2010 அன்று “Times of India” நாளிதழில் பக்கம் 21-இல் “ASSET TEST: Men look at breast first” (ஆண்கள் முதலில் மார்பகங்களையே பார்கின்றனர்) என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட செய்தியில், ஆண் ஒரு பெண்ணின் முகத்தை பார்க்கும் முன் மார்பகங்களையே பார்க்கிறான் என்ற மேலை நாட்டு அறிஞர்கள் நடத்திய ஆராய்ச்சி அறிக்கையை வெளியிட்டு இருந்தார்கள். இவையும் மேலை நாட்டு மக்களை உட்படுத்தியே செய்த ஆராய்ச்சியாகும். தொகுத்துப்பார்க்கின், மேலை நாட்டாரையும் அவர்கள் நாட்டு கலாச்சாரமே உணர்ச்சிகொள்ளச் செய்கிறது என்பது நன்றாய் விளங்கும். இந்தியக்கலாச்சாரமோ விகார உறுப்புகளை எல்லாம் கச்சிதமாய் மறைத்து விடுகிறது. (ஊர்ப்புற தாய்மார்கள் வயல் வேலைச்செய்யும்போது உடுத்தியிருக்கும் உடுத்தலை பார்த்தால் இது விளங்கும்). அதனால் ஆண் மக்கள் கண்களுக்கும் கடிவாளம் கிடைத்து விடுகிறது. தயவுச்செய்து இப்பொழுதாவது புரிந்துகொள்ளுங்கள் ஈனப் பார்வைக்கு காரணம் மனம் மட்டும் அல்ல நாம் தரிக்கும் ஆடையும் தான்.

இவ்வாறு கலாச்சாரமற்ற ஆடை அணிவது தவறா? பகுத்தறிவு இல்லாமல் பேசுகிறார்களா?
இவ்வாறு கலாச்சாரமற்ற ஆடை அணிவது தவறா? பகுத்தறிவு இல்லாமல் பேசுகிறார்களா? என்று பலர் வினவுவது உண்டு. அத்தகையோரிடம், “பகுத்தறிவு என்றால் என்ன?” என்று பதிலே வினவுதல் முற்றிலும் பொருத்தமானதாகவே நான் கருதுகிறேன். பகுத்து அறிவு என்பது நல்லது எது கேட்டது எதுவென்று அறிவியல் ரீதியாக பகுத்துப்பார்த்து அறிவதே ஆகும். எதிர்காலத்திற்காக நாம் சேமிப்பதை போன்றே இதில் நெடுநாளுக்கு பிந்தயது பற்றிய எண்ணமும் வேண்டும். அங்ஙனம் நீண்ட காலச் சிந்தனயோடுப் பார்க்கின் கலாச்சாரம் எத்தனை அவசியம் என்பது தைக்கும்.
கலாச்சாரமற்ற ஆடைகள் மனிதனின் காம உணர்வுகளை தூண்டுகிறது. அத்தகைய உணர்வே பல நேரங்களில் அவனை திசை திருப்பவும் செய்கிறது. இது அக்கலாச்சரத்தில் ஊறிப்போனவர்களுக்கும் பொருந்தும் என்பது ஆரம்பத்திலிருந்து படிப்பவர்களுக்கு இந்நேரம் கருத்தாகி இருக்கும். இதற்கும் அறிவியல் ரீதியான விளக்கம் இருக்கிறது. அநாகரிக ஆடை மனிதனின் பார்வையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன என்பது நாம் பார்த்ததே. இவ்வாறு ஏற்படும் காட்சிப்பாதிப்புகள் மனிதனின் இயக்க திரவங்கள் (“Harmon”) அதிகமாக சுரக்கும் படி செய்து விடுகின்றன. இத்தகைய இயக்க திரவங்கள் (“Harmon”) மேலும் மேலும் உணர்ச்சிகளை தூண்டுகின்றன. மன ஒருமுகத்தையும் மாற்றுகின்றன. மேலும் அண்டச்செல் மற்றும் லிந்திரியம் உற்பத்திக்கும் இத்தகைய இயக்க திரவங்கள் (“Harmon”) உறுதுணையாய் அமைகின்றன. இவைகளின் அதிக உற்பத்திக்கு உடம்பிலிருந்தே சத்துக்கள் எடுக்கப்படுகின்றன. அறிவோடு சிந்தனை செய்யின் இதிலுள்ள அறிவியல் உண்மை விளங்கும். பலபேர் இவைகளின் உற்பத்தியும் வெளிப்போக்கும் ஒன்றும் கெடுதல் இல்லை என்று வாதாடுவார்கள். ஆனால் அவர்களுக்கு நான் உதாரணமாக சொலும் ஓன்று “காயடிக்கப்பட்ட மாடு மற்ற மாடுகளைக் காட்டிலும் அதிக வேலை செய்யும். மேலும் அவைகள் மிகுந்த வலிவுகொண்டவை.” இதற்கு காரணம் அவைகளுக்கு இத்தகைய சக்தி விரயம் இல்லை. மேலும் இயக்க திரவங்கள் (“Harmon”) தொந்தரவால் உணர்ச்சிகளும் அதனால் ஏற்படும் கவன சிதறல்களும் இல்லை. மனிதனுக்கு இதை செய்ய முடியாது. அவனுக்கு இவற்றை கட்டுப்படுத்த எளிய உக்தி கண்களை கட்டுப்படுத்த வேண்டும் ஆனால் குதிரை போல் மறைப்பு கட்ட முடியாது. ஆகவே உடைகள் மூலம் தான் அவற்றை செய்ய வேண்டும்.
மேலும் அநாகரிக உடைகள் மனிதனுக்கு உடலின் வனப்பை காட்டி மோகங்கோள்ளச்செய்கிறது. மன்னுலகம் அம்மோகத்தால் சுண்டி இழுக்கப்படுகிறது. காதல் வயப்படுவதற்குப்பதிலாய், இனக்கவர்ச்சி கொள்கிறார்கள். இது உடலால் வந்த ஈர்ப்பு, உள்ளத்தால் வந்தது அன்று, அன்பினாலும் வந்த ஈர்ப்பு அன்று. அதையே காதல் என்று தவறாய் புரிந்துகொண்டு கூடி வாழ ஆரம்பிக்கிறார்கள். இத்தகைய ஈர்ப்பு புதுமையையே விரும்புவதால். நாளடைவில் ஈர்ப்பு குறைகிறது (பழகப் பழகப் பாலும் புளிக்கும்). இப்பொழுது சற்றே வேறொரு விதமான உடல் வனப்பை கண்ணுறும் போது அடிமனதில் ஈர்ப்பு வந்துவிடுகிறது. இதுவே நாளடைவில் தனது வாழ்க்கை துணையான இணையின் மீது (partner) சலிப்பையும் பின் வெறுப்பையும் ஏற்படுத்தி விவாக ரத்தில் கொண்டு போய்ச்சேர்க்கிறது. இப்படி நாம் எடுத்து விளம்பினால். அதனால் என்ன இன்னொருவரை மணம் செய்து கொண்டால் போகிறது என்று சர்வ சாதரணமாய் சொல்லிவிடக்கூடும் நமது புதுமை விரும்பிகள். ஐயையோ, ஆனால் பலதார மணமும் வாழ்நாளை குறைக்கவே செய்கின்றன. இதுவும் நிரூபணம் செய்யப்பட்ட ஒன்று. எத்தனை இருதயத்துடிப்புகள் ஒன்று உயிர் வாழ்கிறது என்ற கணக்கு எடுப்பில் ஒருதார முறைகளை பின்பற்றும் உயிரிகளே நீண்ட காலம் வாழ்கின்றன என்று முடிவு வந்துள்ளது. (உதாரணம். கிளி, கொக்கு, சிலவகை நரிகள்). சுருங்கச்சொல்லப்போனால் ஒருவிதத்தில் விவாக ரத்திற்கும் (மணப்பிரிகை), கவனச்சிதறல்களுக்கும், வலுகுறைவிர்க்கும், கற்பழிப்பு போன்ற குற்றங்களுக்கும் அநாகரிக உடைகள் காரணமாய் அமைகின்றது.

பாரம்பரிய உடை சௌகரியம் குறைவானதோ?
“பாரம்பரிய உடை சௌகரியம் குறைவானதோ?” என்று ஐயுற்றிருப்பவர் பல பேர். ஆனால் ஊர்ப்புறத்தில் நாற்று நடுதல் முதலிய வேலைகளில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் இதை ஒரு அசௌகரியம் என்று ஒருபோதும் கருதுவது இல்லை. அவர்கள் ஓடினால் கூட அது அவர்களுக்கு இடையூறாய் இராது. நன்கு ஆராய்ந்து கண்டறிந்த உடுத்தல் முறை போலும். பழக்கமே தேவையானது. இன்று பலபேருக்கு அதுபோன்ற உடுத்தல் முறைகள் தெரியாமை வருத்தமளிப்பதே. கட்டுக்கோப்போன இத்தகைய ஆடை முறைகள் உளவியல் ரீதியாகவும் நமது ஒட்டுமொத்த கட்டுக்கோப்பை வளர்க்கின்றன. (ஒரு காரியத்தில் ஏற்படும் கட்டுக்கோப்பு பழக்கம் பிறவற்றிலும் தானகவே வெளிப்படும் என்பது உளவியல் உண்மை.)

அருமை வாசகர்களே இதை படிக்கும் ஒருவரின் மனதையாவது இது தொடுமாயின் அதை நான் என் மிகுந்த வெற்றியாக கொள்வேன். பாரம்பரியம் காக்கப்படவேண்டும், அது அழிந்துவிட்டால் மீண்டும் வராது. நமது முன்னோர்கள் உலகிலேயே தலைசிறந்த அறிவாளிகள் அவர்கள் செய்திருப்பதில் ஏதேனும் ஒரு அறிவியல் உண்மை ஒழிந்திருக்கும். தயவு செய்து உங்கள் விமர்சனகளை அனுப்புங்கள்.

நேரம் ஒதுக்கி என்கருத்துக்களை படித்தற்கு பூரண நன்றி!!!