Archive for ‘எனது செய்யுள்’

ஜனவரி 10, 2011

தமிழன்னைப் பற்று

துடித்ததே நெஞ்சகம் நஞ்சகம் தன்னிலே
துஞ்சியெழுந்த தொரம்பு மாள துளைத்ததென்றே
எம்மவர் என்தமி ழன்னை யுனையே 
ஊனமாய் செய்திடுங் கால் 
 
போற்றிடுவார் நீயவர் தாயெனவே யாயினுஞ் 
சாற்றிடவோ ராடையுஞ் செய்யார் அணிந்திடவோ
ராயிரம் கலனுஞ்செய் வாரெனினும் நாணங்காத்
திடாஅர்நின் மக்களா தார்
 
அன்னையே யுனக்கோர் சிலைகண்டேன் மதுரைமா
நகரந்தனிலே கண்டிட்டோ ருள்ளம் மகிழ்ந்திடவே
துடித்திட்டேன் நீயதிலே போதாத வாடையுடனே
நாணித்துடித் துடித்திட்டல் கண்டு
 
மொழியாவ தெதுவென்றால் பகர்ந்திடவோ ரூடகந்தா
னென்பார றிந்திடவே சொல்லிடுவேன் திணைதந்து
முறைபுகட்டி வாழ்நெறி சொல்லிய தாயினது
திருத்தாள தற்குமே லென்று  
Advertisements
குறிச்சொற்கள்:
பிப்ரவரி 24, 2010

தமிழின் சுவை – எனது முதல் கவிதை

நாஞ்சி லெங்கு மோடி யுறுமல
ராய்ந்து நுண்ணீ திரட்டிய பூமது
வதுவை சொரிந்தே கருத்தா யன்னை
ஆக்கிய தீந்தெள் ளமுதே

நின்னை யானருந் திடுங்கால் அகத்தே
திகட்டுமோ தீஞ்சுவை என்றே வெரூவினும்
கனல்சுடு வயிறுடை அன்றலர் பச்சிளஞ்
சிசுதாய் சினை விடா

தாய்ப்பால் பிஞ்சுக்குத் திகட்டா தீஞ்சுவை
எவர்க்குமே திகட்டா தமிழே நீகொடு
உணர்வு பாலுண்ணும் சேயதோ வதுகொடு
தாயதோ உணர்ந்தான் யார்?

பொருள்:
முதல் பாடல்:

நாஞ்சில் என்பது கன்னியாகுமரி பகுதியை குறிக்கும்.
அது ஐவகை நிலங்களையும் உள்ளடக்கியது. எனவே “நாஞ்சி லெங்கு மோடி” எனும் அடிக்கு ஐவகை நிலங்களுக்கும் சென்று என பொருள் கொள்ளலாம். “யுறுமல ராய்ந்து” என்பது தகுந்த மலர்களை ஆராய்ந்து தெரிந்து என பொருள் படும்.
நுண்ணீ = தேனீ.
திரட்டிய = சேர்த்த.
பூமது வதுவை = மலரின் தேனினை.
சொரிந்தே = கொடுத்தே (சேர்த்தே)
கருத்தா யன்னை ஆக்கிய தீன்தெள் ளமுதே (கருத்தை அன்னை ஆகிய தீன் தெள் அமுதே)
= கருத்துடன் அன்னை உண்டாக்கிய இனிய சிறந்த அமுதமே (பாயசமே).

தொகுந்த விளக்கம்:

கன்னியாகுமரி எனும் ஐவகை நிலங்களும் அடங்கிய பகுதியிலே அலைந்து திரிந்து, அங்குள்ள அத்தனை மலர்களிலும் எவை தகுதியான சிறந்த (இனிய தேனை கொண்டுள்ள) மலர்கள் என ஆராய்ந்து அவைகளிலிருந்து தேனீ தேனை சேகரிக்கிறது. அவ்வண்ணம் தேனீ சேகரித்த மலரின் தேனை ஊற்றி அன்னை பிள்ளைக்கு கவனமாக தயாரித்த பாயசமே.

(இத்தகைய சிறப்புகள் உள்ள) உன்னை நான் அருந்திடும் போது என் மனதிலே நீ மிகுதியான இனிய சுவையினால் திகட்டிவிடுவாய் என்று நான் அஞ்சினாலும் (இச்சமயம் என் எண்ணம் தமிழ் மேல் செல்கிறது) பசியின் பொருட்டு வயிற்றிலே கொள்ளிக்கட்டையை வைத்தாற்போல் உணர்கின்ற பசியை தாங்க முடியாத இன்று பிறந்த குழந்தையானது பாலுண்ணும் பொருட்டு தாயின் உறுப்பை பற்றிவிட்டால் அதை விடாது.

(அந்நிலையில்) தாய்ப்பால் குழந்தைக்கு திகட்டாததை (இயல்பாகவே தாய்ப்பால் குழந்தைக்கு திகட்டாது இந்நிலைமையில் அதன்மேல் குடிக்க குடிக்க ஆர்வமே மிகுந்து கொண்டிருக்கும்) போன்று இனிய சுவை (ஆயினும்) எவர்க்கும் திகட்டாத தமிழே நீ தருகின்ற இனிய உணர்வானது பாலை விரும்பி உண்ணும் பச்சிளங்குழந்தை கொண்டுள்ள ஆர்வமிக்க அன்புடன் கலந்த உணர்வா? அல்லது தாய் அன்புடன் பாலுட்டும் போது உணரும் ஆனந்த உணர்வா? இதை யார் அறிவார்?

நன்றி:
“உணர்வார் உளரோ” என்று வெண்பா இலக்கணத்திற்கு பொருந்தாத முடிவை “உணர்ந்தான் யார்” என்று பொருந்தும்படியாக மாற்றி தந்த என்னுடன் பிறந்த அருமைச் சகோதரருக்கு நன்றி.

குறிப்பு
‘உளரோ’ என்பது ‘நிரைநேர்’ என்று இருந்தாலும் ‘பிறப்பு’ அல்லது ‘நிரைபு’ எனும் வெண்பா ஈற்றடி வாய்ப்பட்டிற்கு பொருந்துவதாக இல்லை

குறிச்சொற்கள்: