Archive for பிப்ரவரி, 2010

பிப்ரவரி 24, 2010

தமிழின் சுவை – எனது முதல் கவிதை

நாஞ்சி லெங்கு மோடி யுறுமல
ராய்ந்து நுண்ணீ திரட்டிய பூமது
வதுவை சொரிந்தே கருத்தா யன்னை
ஆக்கிய தீந்தெள் ளமுதே

நின்னை யானருந் திடுங்கால் அகத்தே
திகட்டுமோ தீஞ்சுவை என்றே வெரூவினும்
கனல்சுடு வயிறுடை அன்றலர் பச்சிளஞ்
சிசுதாய் சினை விடா

தாய்ப்பால் பிஞ்சுக்குத் திகட்டா தீஞ்சுவை
எவர்க்குமே திகட்டா தமிழே நீகொடு
உணர்வு பாலுண்ணும் சேயதோ வதுகொடு
தாயதோ உணர்ந்தான் யார்?

பொருள்:
முதல் பாடல்:

நாஞ்சில் என்பது கன்னியாகுமரி பகுதியை குறிக்கும்.
அது ஐவகை நிலங்களையும் உள்ளடக்கியது. எனவே “நாஞ்சி லெங்கு மோடி” எனும் அடிக்கு ஐவகை நிலங்களுக்கும் சென்று என பொருள் கொள்ளலாம். “யுறுமல ராய்ந்து” என்பது தகுந்த மலர்களை ஆராய்ந்து தெரிந்து என பொருள் படும்.
நுண்ணீ = தேனீ.
திரட்டிய = சேர்த்த.
பூமது வதுவை = மலரின் தேனினை.
சொரிந்தே = கொடுத்தே (சேர்த்தே)
கருத்தா யன்னை ஆக்கிய தீன்தெள் ளமுதே (கருத்தை அன்னை ஆகிய தீன் தெள் அமுதே)
= கருத்துடன் அன்னை உண்டாக்கிய இனிய சிறந்த அமுதமே (பாயசமே).

தொகுந்த விளக்கம்:

கன்னியாகுமரி எனும் ஐவகை நிலங்களும் அடங்கிய பகுதியிலே அலைந்து திரிந்து, அங்குள்ள அத்தனை மலர்களிலும் எவை தகுதியான சிறந்த (இனிய தேனை கொண்டுள்ள) மலர்கள் என ஆராய்ந்து அவைகளிலிருந்து தேனீ தேனை சேகரிக்கிறது. அவ்வண்ணம் தேனீ சேகரித்த மலரின் தேனை ஊற்றி அன்னை பிள்ளைக்கு கவனமாக தயாரித்த பாயசமே.

(இத்தகைய சிறப்புகள் உள்ள) உன்னை நான் அருந்திடும் போது என் மனதிலே நீ மிகுதியான இனிய சுவையினால் திகட்டிவிடுவாய் என்று நான் அஞ்சினாலும் (இச்சமயம் என் எண்ணம் தமிழ் மேல் செல்கிறது) பசியின் பொருட்டு வயிற்றிலே கொள்ளிக்கட்டையை வைத்தாற்போல் உணர்கின்ற பசியை தாங்க முடியாத இன்று பிறந்த குழந்தையானது பாலுண்ணும் பொருட்டு தாயின் உறுப்பை பற்றிவிட்டால் அதை விடாது.

(அந்நிலையில்) தாய்ப்பால் குழந்தைக்கு திகட்டாததை (இயல்பாகவே தாய்ப்பால் குழந்தைக்கு திகட்டாது இந்நிலைமையில் அதன்மேல் குடிக்க குடிக்க ஆர்வமே மிகுந்து கொண்டிருக்கும்) போன்று இனிய சுவை (ஆயினும்) எவர்க்கும் திகட்டாத தமிழே நீ தருகின்ற இனிய உணர்வானது பாலை விரும்பி உண்ணும் பச்சிளங்குழந்தை கொண்டுள்ள ஆர்வமிக்க அன்புடன் கலந்த உணர்வா? அல்லது தாய் அன்புடன் பாலுட்டும் போது உணரும் ஆனந்த உணர்வா? இதை யார் அறிவார்?

நன்றி:
“உணர்வார் உளரோ” என்று வெண்பா இலக்கணத்திற்கு பொருந்தாத முடிவை “உணர்ந்தான் யார்” என்று பொருந்தும்படியாக மாற்றி தந்த என்னுடன் பிறந்த அருமைச் சகோதரருக்கு நன்றி.

குறிப்பு
‘உளரோ’ என்பது ‘நிரைநேர்’ என்று இருந்தாலும் ‘பிறப்பு’ அல்லது ‘நிரைபு’ எனும் வெண்பா ஈற்றடி வாய்ப்பட்டிற்கு பொருந்துவதாக இல்லை

Advertisements
குறிச்சொற்கள்:
பிப்ரவரி 24, 2010

தினம் பத்து தமிழ்ச் சொற்கள்

பிறமொழிச் சொல்லுக்கான தூய தமிழ்ச் சொல்

…அங்காடி = கடைத்தெரு

…அகிம்சை = மென்முறை

…உபயோகம் = பயன்பாடு

…கவசம் = கேடயம்

…கஷ்டம் = இடர்பாடு

…காலரா = 1:நீர்கம்முதல் 2:நீர்க்கம்பு

…சட்டை = அங்கி

…சந்தேகம் = ஐயம்

…சுத்தம் = தூய்மை

…துவக்கம் = தொடக்கம், ஆரம்பம்

நட்டம் (நஷ்டம்) = இழப்பு

…நீதி = முறை

…ப்ரச்சனை = 1:தகராறு  2:குடைச்சல் 3:கோளாறு

பெஞ்ச் = அமர்வாயம்

…பேனா = எழுதுபீலி, தூவல்

…மாதம் = திங்கள்

…மைதானம் = திடல்

லாபம் = ஆதாயம்

வருடம் = ஆண்டு

…வாரம் = கிழமை

…விபச்சாரி = பரத்தை

 

இங்க்லிஷிலிருந்து தமிழ் (English to Thamizh)

Announce = அறிவிப்பு

Turbulance  = அமளி (பாய் பொருளில் ஏற்படுவது)

Break fast = அற்றாலம்

Dinner = முற்றாலம்

Problem  = தகராறு, கோளாறு, குடக்கம், குடைசல், சிக்கல்

Year = ஆண்டு

பிப்ரவரி 21, 2010

கலாச்சார உடை,

அன்பு வாசகர்களுக்கு, கருணை கூர்ந்து இதை முற்றிலும் படிக்கவும். இந்தப் பக்கத்தை நான் தட்டச்சு செய்கையில் எனக்கு பல்வேறு குழப்பங்களும், சிந்தனைகளும் இருந்தன. இருந்தபோதிலும் ஒழுக்கத்திற்கும், நமது பாரம்பரியத்திற்கும் இடையூறான ஒன்றையும் நான் எழுதப் போவதில்லை என்ற எண்ணம் மேலோங்கவே இதை தொடர்கிறேன். இந்தப்பக்கமானது நம் வாசகர்கள் தெளிவு பெறுவதற்காகவே இடப்படுகிறது.

நவ நாகரிகம் என்ற பெயரில் இன்றைய கலாச்சாரம் அநாகரிகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை நாம் அறியாமல் இல்லை. “எப்படி வாழ்ந்தால் என்ன? நான் எப்படி இருந்தால் என்ன? பார்ப்பவர்களுக்கு மனக்கட்டுப்பாடு இருந்தால் போதும். ஒழுக்கம் என்பது பார்ப்பவர்கள் கண்ணில் தான் இருக்கிறது. இதில் அறிவியல் ரீதியாக எந்தக் குற்றமும் இல்லை” எவ்வாறு பகுத்தறிவாளர்களைப்போல் போல் வாதாடுபவர்கள் நம்மில் பலபேர். ஐந்தறிவுள்ள விலங்குகளை ஆறறிவுள்ள மனிதர்களோடு ஒப்பிட துணிந்துவிட்ட அதி மேதாவிகள் இவர்கள். இவ்வாறு எழும் கேள்விகளுக்கு இனி ஒவ்வொன்றாக பதில்களை பார்ப்போம்.

நமது கலாச்சாரம் தான் விகற்பமான ஆடை தரித்திருப்பவர்கள் மேல் தவறான பார்வை கொள்ள வைக்கிறதா?
“நமது கலாச்சாரம் தான் விகற்பமான ஆடை தரிப்பவர்களை தவறாக பார்க்க வைக்கிறதா?” என்ற ஐயத்தை இன்று பாரம்பரிய விருமிபிகளிடமும் ஏற்படுத்திவிட்டார்கள் நமது நவீன விரும்பிகள். ஏறக்குறைய ஒரு ஆண்டிற்கு முன் “Times of India” நாளிதழில் வெளியிட்டிருந்த இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவு “Women in bikini makes the men to look at them as an object” (குறை ஆடைகளிலிருக்கும் பெண்கள், ஆண்கள் தங்களை ஒரு காட்சிப் பொருட்களாகவே பார்க்கச்செய்கிறார்கள்). இதன் உட்கருத்து விளக்கம் இன்றியே உங்களுக்கு விளங்கியிருக்கும். இருப்பினும் விளக்குவது கடமை. பொதுவான அவர்கள் ஆராய்ச்சிமுடிவு நாடுகள் கடந்தது. குறிப்பாக அவர்கள் நாட்டு மக்களையே ஆராய்ச்சிக்கு உட்படுத்தி எடுக்கப்பட்டது. எனவே விகற்பமான ஆடைகள் அவர்களின் உணர்வுகளையும் தூண்டுகிறது என்றே கொள்ளலாம். மனிதனின் கண்களுக்கு வித்தியாசமானவைகள் எளிதாய் தெரியும். ஆயிரம் பானைகளிருக்கும் போதும் ஒரு பானை உடைந்திருந்தால் அதுதான் கண்களுக்கு எளிதில் புலனாகும். போன்றே, விகற்பமான ஆடை அணிபவர்கள் நமதூரில் அரிதே. ஆகையால் அவைகளே நம் கண்களுக்கு எளிதில் புலனாகும், நம் பார்வையையும் ஈர்க்கும். வெளிநாடுகளில் அது பழகிப்போன காரியம் அதனால் அவர்களின் தனிக்கவனத்தை அது தூண்டாத போதிலும் மேற்கண்ட ஆராய்ச்சி முடிவு, அவர்களின் உணர்வுகளை தூண்டுவதை உறுதி செய்கிறது.
மேலும் 19-02-2010 அன்று “Times of India” நாளிதழில் பக்கம் 21-இல் “ASSET TEST: Men look at breast first” (ஆண்கள் முதலில் மார்பகங்களையே பார்கின்றனர்) என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட செய்தியில், ஆண் ஒரு பெண்ணின் முகத்தை பார்க்கும் முன் மார்பகங்களையே பார்க்கிறான் என்ற மேலை நாட்டு அறிஞர்கள் நடத்திய ஆராய்ச்சி அறிக்கையை வெளியிட்டு இருந்தார்கள். இவையும் மேலை நாட்டு மக்களை உட்படுத்தியே செய்த ஆராய்ச்சியாகும். தொகுத்துப்பார்க்கின், மேலை நாட்டாரையும் அவர்கள் நாட்டு கலாச்சாரமே உணர்ச்சிகொள்ளச் செய்கிறது என்பது நன்றாய் விளங்கும். இந்தியக்கலாச்சாரமோ விகார உறுப்புகளை எல்லாம் கச்சிதமாய் மறைத்து விடுகிறது. (ஊர்ப்புற தாய்மார்கள் வயல் வேலைச்செய்யும்போது உடுத்தியிருக்கும் உடுத்தலை பார்த்தால் இது விளங்கும்). அதனால் ஆண் மக்கள் கண்களுக்கும் கடிவாளம் கிடைத்து விடுகிறது. தயவுச்செய்து இப்பொழுதாவது புரிந்துகொள்ளுங்கள் ஈனப் பார்வைக்கு காரணம் மனம் மட்டும் அல்ல நாம் தரிக்கும் ஆடையும் தான்.

இவ்வாறு கலாச்சாரமற்ற ஆடை அணிவது தவறா? பகுத்தறிவு இல்லாமல் பேசுகிறார்களா?
இவ்வாறு கலாச்சாரமற்ற ஆடை அணிவது தவறா? பகுத்தறிவு இல்லாமல் பேசுகிறார்களா? என்று பலர் வினவுவது உண்டு. அத்தகையோரிடம், “பகுத்தறிவு என்றால் என்ன?” என்று பதிலே வினவுதல் முற்றிலும் பொருத்தமானதாகவே நான் கருதுகிறேன். பகுத்து அறிவு என்பது நல்லது எது கேட்டது எதுவென்று அறிவியல் ரீதியாக பகுத்துப்பார்த்து அறிவதே ஆகும். எதிர்காலத்திற்காக நாம் சேமிப்பதை போன்றே இதில் நெடுநாளுக்கு பிந்தயது பற்றிய எண்ணமும் வேண்டும். அங்ஙனம் நீண்ட காலச் சிந்தனயோடுப் பார்க்கின் கலாச்சாரம் எத்தனை அவசியம் என்பது தைக்கும்.
கலாச்சாரமற்ற ஆடைகள் மனிதனின் காம உணர்வுகளை தூண்டுகிறது. அத்தகைய உணர்வே பல நேரங்களில் அவனை திசை திருப்பவும் செய்கிறது. இது அக்கலாச்சரத்தில் ஊறிப்போனவர்களுக்கும் பொருந்தும் என்பது ஆரம்பத்திலிருந்து படிப்பவர்களுக்கு இந்நேரம் கருத்தாகி இருக்கும். இதற்கும் அறிவியல் ரீதியான விளக்கம் இருக்கிறது. அநாகரிக ஆடை மனிதனின் பார்வையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன என்பது நாம் பார்த்ததே. இவ்வாறு ஏற்படும் காட்சிப்பாதிப்புகள் மனிதனின் இயக்க திரவங்கள் (“Harmon”) அதிகமாக சுரக்கும் படி செய்து விடுகின்றன. இத்தகைய இயக்க திரவங்கள் (“Harmon”) மேலும் மேலும் உணர்ச்சிகளை தூண்டுகின்றன. மன ஒருமுகத்தையும் மாற்றுகின்றன. மேலும் அண்டச்செல் மற்றும் லிந்திரியம் உற்பத்திக்கும் இத்தகைய இயக்க திரவங்கள் (“Harmon”) உறுதுணையாய் அமைகின்றன. இவைகளின் அதிக உற்பத்திக்கு உடம்பிலிருந்தே சத்துக்கள் எடுக்கப்படுகின்றன. அறிவோடு சிந்தனை செய்யின் இதிலுள்ள அறிவியல் உண்மை விளங்கும். பலபேர் இவைகளின் உற்பத்தியும் வெளிப்போக்கும் ஒன்றும் கெடுதல் இல்லை என்று வாதாடுவார்கள். ஆனால் அவர்களுக்கு நான் உதாரணமாக சொலும் ஓன்று “காயடிக்கப்பட்ட மாடு மற்ற மாடுகளைக் காட்டிலும் அதிக வேலை செய்யும். மேலும் அவைகள் மிகுந்த வலிவுகொண்டவை.” இதற்கு காரணம் அவைகளுக்கு இத்தகைய சக்தி விரயம் இல்லை. மேலும் இயக்க திரவங்கள் (“Harmon”) தொந்தரவால் உணர்ச்சிகளும் அதனால் ஏற்படும் கவன சிதறல்களும் இல்லை. மனிதனுக்கு இதை செய்ய முடியாது. அவனுக்கு இவற்றை கட்டுப்படுத்த எளிய உக்தி கண்களை கட்டுப்படுத்த வேண்டும் ஆனால் குதிரை போல் மறைப்பு கட்ட முடியாது. ஆகவே உடைகள் மூலம் தான் அவற்றை செய்ய வேண்டும்.
மேலும் அநாகரிக உடைகள் மனிதனுக்கு உடலின் வனப்பை காட்டி மோகங்கோள்ளச்செய்கிறது. மன்னுலகம் அம்மோகத்தால் சுண்டி இழுக்கப்படுகிறது. காதல் வயப்படுவதற்குப்பதிலாய், இனக்கவர்ச்சி கொள்கிறார்கள். இது உடலால் வந்த ஈர்ப்பு, உள்ளத்தால் வந்தது அன்று, அன்பினாலும் வந்த ஈர்ப்பு அன்று. அதையே காதல் என்று தவறாய் புரிந்துகொண்டு கூடி வாழ ஆரம்பிக்கிறார்கள். இத்தகைய ஈர்ப்பு புதுமையையே விரும்புவதால். நாளடைவில் ஈர்ப்பு குறைகிறது (பழகப் பழகப் பாலும் புளிக்கும்). இப்பொழுது சற்றே வேறொரு விதமான உடல் வனப்பை கண்ணுறும் போது அடிமனதில் ஈர்ப்பு வந்துவிடுகிறது. இதுவே நாளடைவில் தனது வாழ்க்கை துணையான இணையின் மீது (partner) சலிப்பையும் பின் வெறுப்பையும் ஏற்படுத்தி விவாக ரத்தில் கொண்டு போய்ச்சேர்க்கிறது. இப்படி நாம் எடுத்து விளம்பினால். அதனால் என்ன இன்னொருவரை மணம் செய்து கொண்டால் போகிறது என்று சர்வ சாதரணமாய் சொல்லிவிடக்கூடும் நமது புதுமை விரும்பிகள். ஐயையோ, ஆனால் பலதார மணமும் வாழ்நாளை குறைக்கவே செய்கின்றன. இதுவும் நிரூபணம் செய்யப்பட்ட ஒன்று. எத்தனை இருதயத்துடிப்புகள் ஒன்று உயிர் வாழ்கிறது என்ற கணக்கு எடுப்பில் ஒருதார முறைகளை பின்பற்றும் உயிரிகளே நீண்ட காலம் வாழ்கின்றன என்று முடிவு வந்துள்ளது. (உதாரணம். கிளி, கொக்கு, சிலவகை நரிகள்). சுருங்கச்சொல்லப்போனால் ஒருவிதத்தில் விவாக ரத்திற்கும் (மணப்பிரிகை), கவனச்சிதறல்களுக்கும், வலுகுறைவிர்க்கும், கற்பழிப்பு போன்ற குற்றங்களுக்கும் அநாகரிக உடைகள் காரணமாய் அமைகின்றது.

பாரம்பரிய உடை சௌகரியம் குறைவானதோ?
“பாரம்பரிய உடை சௌகரியம் குறைவானதோ?” என்று ஐயுற்றிருப்பவர் பல பேர். ஆனால் ஊர்ப்புறத்தில் நாற்று நடுதல் முதலிய வேலைகளில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் இதை ஒரு அசௌகரியம் என்று ஒருபோதும் கருதுவது இல்லை. அவர்கள் ஓடினால் கூட அது அவர்களுக்கு இடையூறாய் இராது. நன்கு ஆராய்ந்து கண்டறிந்த உடுத்தல் முறை போலும். பழக்கமே தேவையானது. இன்று பலபேருக்கு அதுபோன்ற உடுத்தல் முறைகள் தெரியாமை வருத்தமளிப்பதே. கட்டுக்கோப்போன இத்தகைய ஆடை முறைகள் உளவியல் ரீதியாகவும் நமது ஒட்டுமொத்த கட்டுக்கோப்பை வளர்க்கின்றன. (ஒரு காரியத்தில் ஏற்படும் கட்டுக்கோப்பு பழக்கம் பிறவற்றிலும் தானகவே வெளிப்படும் என்பது உளவியல் உண்மை.)

அருமை வாசகர்களே இதை படிக்கும் ஒருவரின் மனதையாவது இது தொடுமாயின் அதை நான் என் மிகுந்த வெற்றியாக கொள்வேன். பாரம்பரியம் காக்கப்படவேண்டும், அது அழிந்துவிட்டால் மீண்டும் வராது. நமது முன்னோர்கள் உலகிலேயே தலைசிறந்த அறிவாளிகள் அவர்கள் செய்திருப்பதில் ஏதேனும் ஒரு அறிவியல் உண்மை ஒழிந்திருக்கும். தயவு செய்து உங்கள் விமர்சனகளை அனுப்புங்கள்.

நேரம் ஒதுக்கி என்கருத்துக்களை படித்தற்கு பூரண நன்றி!!!